ரஷ்யா - உக்ரைன் போரில் மோடியின் மாஸ்டர்மைண்ட்.. இரண்டு நாடுகளுடனும் நட்பு.. இதுதான் ராஜதந்திரம்!
டெல்லி: ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போரில் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் ராஜாங்க நடவடிக்கைகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளன. மோடியின் ஒவ்வொரு ராஜாங்க மூவும் சர்வதேச அரசியலில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உலக நாடுகளால் கவனிக்கப்பட காரணம்.. கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் உக்ரைன் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. அதோடு ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு இடையே.. மிகவும் நுட்பமாக பிரதமர் மோடி.. சர்வதேச அரசியலை கையாண்டு வருகிறார்.
எந்த பக்கமும் நிலைப்பாடு எடுக்காமல்.. நடுநிலையாக பிரதமர் மோடி நகர்த்தி வரும் காய் உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இரண்டு நாடுகளுடனும் இந்தியா உறவு வைத்துள்ளது. இந்த உறவு பாதிக்காமல், இரண்டுக்கும் நடுவே சாமர்த்தியமாக நடக்கும் வித்தையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டு வருகிறார். முக்கியமாக இந்த சர்வதேச பிரச்சனையில் மோடி முக்கியமான அமைதி தூதுவராக உருவெடுக்கும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. இந்தியா நடத்திய ஜி 20 மாநாடாக இருக்கட்டும், ரஷ்யா, உக்ரைனுக்கு அடுத்தடுத்து சென்றதாக இருக்கட்டும்.. இதுவரை மோடி எடுத்து போடும் ஒவ்வொரு கார்டும் அசத்தலாக இருந்து வந்துள்ளது!

ராஜாங்க திட்டமிடல்: இந்தியா ரஷ்யா இடையிலான உறவு மிக நீண்டது.. சோவியத் யூனியன் வலுவான நட்பு நாடாக இருந்தபோதே ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கிய உறவு வைத்து இருந்தது. பனிப்போர் காலத்திலும் கூட இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை கடைப்பிடித்தது. 1971 இல் கையெழுத்திடப்பட்ட இந்தோ-சோவியத் அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான உறவிற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. பல ஆண்டுகளாக, ரஷ்யா ஒரு முக்கியமான நட்பு நாடாக , பாதுகாப்பு பங்காளியாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை தொடங்கி வழங்கி வருகிறது..
உக்ரைன், சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரமடைந்த பிறகும் கூட இரண்டு நாட்டு உறவுகளையும் பாதிக்காத வண்ணம், இரண்டு நாடுகளுடனும் இந்தியாவிற்கு மதிப்புமிக்க உறவு உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு, கல்வி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளும் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வருகிறது.
முக்கியமாக ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது, இரண்டு நாடுகளையும் பகைக்காமல் இந்த உறவுகளை வழிநடத்துவது ஒரு பெரிய சவாலாகும். அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மற்ற உலக நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தியாவிற்கு எதிராகவும் மேற்கு உலக நாடுகள் இதே அழுத்தத்தை கொடுத்து வருகின்றன.
ஆனால் இதில் எந்த பக்கமும் சாயாமல்.. இந்தியா நடுநிலை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து, பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்கு வழிவகுக்கும் விதமாக ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியின் அரசாங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதிப்புறாவாக செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவை தனிமைப்படுத்த சர்வதேச நாடுகள் முயன்றாலும்.. இந்தியா சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி, கச்சா எண்ணெய் வாங்குவது உட்பட, ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து நட்பு பாராட்டி வருவதே.. இந்தியாவின்.. பிரதமர் மோடியின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
இதற்கு இடையே மோடியின் உக்ரைன் பயணம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மோடியின் உக்ரைன் பயணம், உலக நாடுகளின் அமைதிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும்.. போர் நிறுத்தத்திற்காக இந்தியா மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளையும் உலக நாடுகளுக்கு எடுத்துரைத்து உள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் அவருக்குக் கிடைத்த வரவேற்பு கவனம் பெற்றுள்ளது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கக்கூடிய ஒரு தேசமாக இந்தியாவை, நபராக மோடியை உலக நாடுகள் பார்ப்பதை உணர்த்துகின்றன. இரு நாடுகளிலும் எந்த வித எதிர்ப்பும் இன்றி.. அன்பான வரவேற்பை மோடி பெற முடிந்தது என்பது சர்வதேச அரங்கில் அவருக்கு உள்ள மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.
சமூக வலைதள டிரெண்ட்: போரை நிறுத்திய நாயகன் மோடி!
இங்கே இந்தியாவில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நாடு திரும்பிய மோடியின் உக்ரைன் பயணம் சமூக வலைதளங்களில்.. போரை நிறுத்திய நாயகன் என்று கவனம் பெற்று வருகிறது. லோக்சபா தேர்தலின் போது உருவான 'பாப்பா நே வார் ருக்வா டி' (போரை நிறுத்திய அப்பா) என்ற சொற்றொடர் இந்த முறை மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
மோடியின் ஆதரவாளர்கள் X (ட்விட்டர்) போன்ற தளங்களில் மோடியின் ராஜதந்திர முயற்சிகளைப் பாராட்டி பேசி வருகின்றனர். "மோடி ஜி உண்மையிலேயே ஒரு உலகளாவிய தலைவர்" மற்றும் "அமைதியை ஏற்படுத்துபவராக.. இந்தியாவை உலக அளவிற்கு உயர்த்தும் நபராக மோடி உயர்ந்து உள்ளார்" போன்ற கருத்துக்களுடன் பல நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதே சமயம் மோடியின்.. இந்த வெளிநாட்டு பயணத்தை சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர். இதெல்லாம் பிஆர் பயணம், இந்த பயணத்தால் பெரிய அளவில் பலன் இருக்காது, இரண்டு நாட்டு அமைதியை ஏற்படுத்த மோடி செய்தது என்ன என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் எந்த நாடும் செய்ய முடியாததை மோடி செய்துள்ளார்.. இந்தியா செய்துள்ளது. புடின், ஜெலன்ஸ்கி இருவரையும் அடுத்தடுத்து சில வாரங்களில் மோடி சந்தித்ததே இதற்கு பெரிய உதாரணம். இரண்டு நாட்டு மோதலில் இந்தியா அமைதியின் தூதுவராக இருப்பதை இந்த சந்திப்புகள் உணர்த்துகின்றன.
அமைதியின் தூதுவர்: இரண்டு நாட்டிற்கும் சென்றது.. ரஷ்யா, உக்ரைன் நாட்டு தலைவர்களை சந்தித்தது.. இரண்டு நாட்டு அமைதிக்கான தூதுவராக இந்தியாவை உயர்த்தி உள்ளது. முக்கியமாக சர்வதேச அரசியல் மோதலில் மோடி அமைதியின் தூதுவராக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியாவின் அணி சேரா கொள்கை, நடுநிலை தன்மை, அரசியல் சிறத்தன்மை ஆகியவை ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை நம்பிக்கைக்குரிய நாடாக மாற்றி உள்ளது. மோடியின் உக்ரைன் பயணம் இதை உறுதி செய்துள்ளது. இரண்டு நாட்டு தலைவர்களுடன் மோடி நெருக்கமாக இருப்பது.. சர்வதேச அளவில் இந்தியா வலிமையாக இருப்பது ஆகியவை இரண்டு நாட்டு மோதலில் இந்தியா அமைதியின் தூதுவராக உருவெடுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
Notice PM Modi keeps his hand on Zelensky's shoulder throughout the video. He appears like an elder brother comforting him.
— Mohit Babu 🇮🇳 (@Mohit_ksr) August 23, 2024
The personal touch in Modiji's Diplomacy 🫰🏻 pic.twitter.com/CCtF9LibY9
இந்தியாவின் சிறப்பான திட்டமிடல்:
இதில் கவனிக்க வேண்டிய விஷயமே.. பிரதமர் மோடி இந்த விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்கிறார். உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறார். அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவை விட்டுக்கொடுக்கவில்லை. ரஷ்யாவுடன் உறவு இருந்தாலும் உக்ரைனுக்கு செல்கிறார். உக்ரைனையும் மோடி விட்டுக்கொடுக்கவில்லை. இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. இரண்டு நாடுகள் இடையே நெருக்கமான உறவை கடைப்பிடித்து யாருடனும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வது சாதாரண விஷயம் இல்லை. இதை எல்லாம் எந்த விதமான சர்வதேச அழுத்தமும் இன்றி மோடி செய்வதே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!
வார்த்தை இழந்த எதிர்க்கட்சிகள்:
மோடியின் வருகை உலக நாடுகள் இடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இந்தியாவில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், பெரும்பாலும் அமைதியாகவே உள்ளது. காங்கிரசின் மௌனம் கவனிக்கத்தக்கது, குறிப்பாக லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் 'பாப்பா நே வார் ருக்வா டி' (போரை நிறுத்திய அப்பா) என்ற வாசகத்தை எதிர்த்த காங்கிரஸ் இந்த முறை அமைதியாகி உள்ளது.இதில் மோடியின் வலுவான நிலைப்பாட்டை விமர்சனம் செய்தால்.. இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்வது போல ஆகிவிடும் போல என்பதால் மணி கட்டிய பூனை போல காங்கிரஸ் கப்சிப் என்று அமைதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications