போய் வாருங்கள் பிபின்.. காற்றில் கலந்தார்.. கங்கையில் கரைந்தார்.. ஹரித்வாரில் கரைக்கப்பட்டது அஸ்தி
பிபின் ராவத் அஸ்தி கங்கையில் கரைக்கப்படுகிறது
டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி கங்கையில் இன்று கரைக்கப்பட்டது... முன்னதாக, இதற்கான சடங்கு நிகழ்ச்சிகளை குடும்பத்தினர் மேற்கொண்டனர்.
குன்னூர் அருகே முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் சென்ற ஹெலிகாப்டா் கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளானது... அதில் குரூப் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கடந்த வியாழக்கிழமை கோவையில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன... அங்கு அஞ்சலிக்காக உடல்கள் வைக்கப்பட்டன.

பிரதமர் மோடி
பாலம் ஏர்போர்ட்டில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு, விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

அஞ்சலி
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்வி ரமணா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கா் சிங் தாமி, ஹரியானா முதல்வா் மனோகர் லால் கட்டர், மத்திய அமைச்சா்கள் ஜிதேந்திர சிங், அனுராக் தாக்குா், ராம்தாஸ் அதாவலே, மல்லிகாா்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் இருவரின் உடல்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வீரவணக்கம்
பொதுமக்களும், ராணுவ அதிகாரிகளும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.. மதியம் 2.20 மணியளவில் பிரார் சதுக்க மயானத்துக்கு ராணுவ வாகனத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் மக்கள் வீர வணக்கம் செலுத்தினர்.. வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்... விபின் ராவத், மதுலிகா உடல்களுக்கு மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் இறுதி சடங்குகளை செய்தனர்.. இறுதியில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க இருவரது உடல்களும் எரியூட்டப்பட்டன.

கங்கை ஆறு
விபின் ராவத், மனைவி மதுலிகா ஆகியோரது அஸ்தி, உத்தரகண்டின் ஹரித்வாரில் கங்கை நதியில் கரைக்கப்படவுள்ளதாக, அவர்களின் இளைய மகள் தாரிணி நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.. அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டு, அதன்பிறகு பாரம்பரிய சடங்குகளும் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.. மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் முன்னிலையில், பல்வேறு ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த அஸ்தி கரைப்பு சடங்கில் கலந்து கொள்வதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவியின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது... மறைந்த, விபின் ராவத் உத்தரகாண்ட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications