அடுத்த விக்கெட்.. காங்கிரசில் இருந்து வெளியேறினார் குலாம் நபி ஆசாத்.. உச்சம் பெற்ற உட்கட்சி மோதல்!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போது மாபெரும் மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கடந்த 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் செயற்குழு ஆன்லைன் மூலம் நடக்க உள்ளது.
இதில் தேர்தல் குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

தேர்தல்
இந்த நிலையில்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கடந்த வாரம்தான் இவர் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் வழிகாட்டு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் வழிகாட்டு குழு தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த பதவியில் இருந்து இவர் ராஜினாமா செய்தார். இது காங்கிரஸ் கட்சியில் அவருக்கு இருக்கு மன வருத்தத்தை காட்டுவதாக இருந்தது.

ராஜினாமா
ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் அதே நாளில் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக வர வேண்டும் என்று இவர் கோரிக்கை விடுத்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் சோனியாவிற்கு எதிராக திரும்பிய ஜி 23 தலைவர்களில் இவர் முக்கியமானவராக இருந்தார். சோனியா காந்திக்கு எதிராக இவர் கட்சி கூட்டங்களில் பேசியதாகவும் கூறப்பட்டது. சோனியா காந்தியும் இவருக்கு முக்கிய பதவிகள் தராமல் ஓரம்கட்டி வந்ததாக கூறப்பட்டது.

என்ன நடந்தது
தேசிய அரசியலில் இருந்த அவரை மீண்டும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் வழிகாட்டு குழு தலைவராக நியமித்து மாநில அரசியலுக்கு அனுப்பியதை குலாம் நபி ஆசாத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் குலாம் நபி ஆசாத் கட்சியில் உள்ள அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். அதோடு கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். இதோடு ஜி 23 தலைவர்களில் காங்கிரசில் இருந்து விலகும் 4வது தலைவர் இவர் ஆவார்.

கபில் சிபல்
சமீபத்தில்தான் கபில் சிபல் காங்கிரசில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சி ஆதரவோடு ராஜ்ய சபா எம்பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பெரும்பாலும் அசோக் கெலாட் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படலாம். அசோக் கெலாட் சோனியாவிற்கு நெருக்கமானவர். இவர் தலைவராவதை ஜி 23 தலைவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications