“அச்சமின்றி வாழ எனக்கான சுதந்திரத்தை திரும்பக் கொடுங்கள்” - குஜராத் அரசுக்கு பில்கிஸ் பானு கோரிக்கை
டெல்லி: குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் மற்றும் 7 பேரை கொலை செய்த குற்றத்தில் சிறை தண்டனை பெற்று வந்த 11 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.
Recommended Video
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 'பில்கிஸ் பானு', இந்த விடுதலை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நீதி துறையின் மீதான தனது நம்பிக்கை உறுதியாக இல்லையென்றும் பானு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் "மீண்டும் பயமற்று வாழ்வதற்கான உரிமையை எனக்கு கொடுங்கள்" என குஜராத் மாநில அரசுக்கு பானு கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பில்கிஸ் பானு எனும் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தை சார்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டவர்களை சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில அரசு விடுதலை செய்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பானு தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது அந்த சம்பவத்தின் அதிர்ச்சியை மீண்டும் ஒருமுறை தற்போது எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான 11 குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அறிந்தது முதல் நான் உணர்ச்சியற்றவளாய் இருக்கிறேன்" என்று தனது அறிக்கையில் பானு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "இன்று நான் இதை மட்டுமே சொல்ல முடியும். ஒரு பெண்ணுக்கான நீதி இப்படி தான் முடிவடைய வேண்டுமா?. நான் நமது மண்ணின் உச்சபட்சமாக உள்ள நீதிமன்றங்களை நம்பினேன். அதேநேரம், மெதுவாக எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியுடன் வாழ கற்றுக்கொண்டேன். ஆனால், 11 குற்றவாளிகளின் விடுதலை என்னிடமிருந்து அமைதியைப் பறித்தது மட்டுமில்லாமல், குற்றவாளிகளின் விடுதலை நீதியின் மீதான எனது நம்பிக்கையையும் அசைத்துவிட்டது"
"என்னுடைய நம்பிக்கை, என்னுடைய முயற்சி என்பது எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காக போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கானதாகும். இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் முன் என் பாதுகாப்பு குறித்து யாரும் என்னுடைய அபிப்பிராயத்தை கேட்கவில்லை. குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுப்பது இதுதான். தயவுசெய்து விடுதலை உத்தரவை திரும்ப பெறுங்கள். அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான எனக்கான உரிமையை, சுதந்திரத்தை திரும்பக் கொடுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று பானு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications