கழுதை இல்ல.. ஆடு! சரிக்கா.. இது ராகு காலம் - நாடாளுமன்றத்தில் நிர்மலா - அப்துல்லா இடையே கலகல விவாதம்
நிர்மலா சீதாராமன் இதை அமிர்த காலம் என்று தெரிவித்ததாகவும், மக்கள் இதை ராகு காலம் என்று நினைப்பதாகவும், ஆனால் இது எம காலம் என்றும் மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பேசினார்.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது இதை அமிர்த காலம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் மக்கள் இதை ராகு காலம் என்று நினைப்பதாகவும், ஆனால் இது எம காலமாக உள்ளதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பேசினார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 நிதியாண்டிற்கான முழு நிதிநிலை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் மத்திய பாஜக அரசின் திட்டங்கள், செயல்முறைகளை சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்தார்.
அப்போது, "பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா திட்டத்தை சுட்டிக்காட்டி "அம்ரித் காலின் முதல் பட்ஜெட் இதுதான்." என்று நிர்மலா சீதாராமன் என்று கூறினார்.

அம்ரித் கால் என்றால் என்ன?
நிதியமைச்சர் கூறிய அம்ரித் கால் என்பதற்கு "அமிர்த காலம்" என்ற அர்த்தம் உள்ளது. இது வேதகால ஜோதிடத்தில் இருந்து வந்த வார்த்தையாகும். பிரதமர் நரேந்திர மோடி புதிய இந்தியா குறித்து தொடர்ந்து பேசி வரும் நிலையில் அமிர்த காலம் தொடங்கிவிட்டதாக பாரதிய ஜனதா நம்புகிறது. எனவே இந்த பட்ஜெட்டை அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று அவர் கூறினார்.

ஒளிமயமான எதிர்காலம்
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய பொருளாதாரம் என்பது ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் சென்றுகொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் டிஜிட்டல் துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. உலக அளவில் 10 வது இடத்திலிருந்து 5 வது பெரிய பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. இந்தியாவில் தனி நபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.

எம்.எம்.அப்துல்லா பேச்சு
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, "ஒரு தமிழ் பழமொழியுடன் என் பேச்சை தொடங்குகிறேன். 'ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிர்ஷ்டம் இருக்கும் கழுதை மேய்க்க' என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன் இது கழுதை அல்ல, ஆடு என்று கூறினார்.

ஆடா? கழுதையா?
இதை கேட்ட அப்துல்லா, "திருச்சியில் அப்படி இருக்கும் அக்கா. புதுக்கோட்டையில் கழுதைதான். ஊருக்கு ஊரு மாறும்." என்றார். ஊருக்கு ஊர் மாறாது என்று நிர்மலா சீதாராமன் கூற, ஆடு என்றே வைத்துக் கொள்வோம் என்று கூறினார் எம்.எம்.அப்துல்லா. இதை கூட்ட அவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் வாய்விட்டு சிரித்தார்.

அமேசான் அரசு
பேச்சை தொடர்ந்த எம்.எம். அப்துல்லா, "இதன் அர்த்தம் என்னவென்றால், ஆட்சி செய்ய ஆசையோ கனவோ இருக்கிறது. ஆனால், ஆடு மேய்க்கவே முடிகிறது. இது தமிழில் பிரபலமான பழமொழி. இந்த அரசு 2014, 2019ல் அமைக்கப்பட்டபோது மக்களின் எதிர்பார்ப்பு என்ன? சிறப்பான அரசாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இறுதியில் கிடைத்ததையெல்லாம் விற்கும் அமேசான் அரசையே பெற்றார்கள்.

இது ராகுகாலம்
மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் சார்ந்து இல்லை. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றி அதில் இல்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அமிர்த காலம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் மக்கள் இதை ராகு காலம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது எம காலமாக உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications