அடடே செம! நெட் வசதி தேவையில்லை.. நேரடியாக மொபைலில் டிவி சேனல்களை பார்க்கலாம்.. விரைவில் வருகிறதா?
டெல்லி: இண்டெர்நெட் வசதி இல்லாமல் நேரடியாக செல்போனில் டிவி சேனல்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன் பயன்பாடு எல்லாம் மிகவும் அத்தியாவசியம் ஆகிவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.. 90 - களின் துவக்கத்தில் வீட்டிற்கு ஒரு போனையே பார்ப்பது அரிதாக இருந்தது. ஆனால், தற்போது வீட்டில் இருக்கும் அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழும் அளவுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் பெருகிவிட்டது.

பேசும் வசதியுடன் மட்டுமே அறிமுகம் ஆன செல்போன்கள் படிப்படியாக முன்னேற்றம் பெற்று தற்போது உள்ளங்கைக்குள் உலகமே வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அனைத்து வசதிகளும் வந்து விட்டது. இணையவசதி மூலமாக இணைய உலகில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் செல்போன் மூலமாகவே பெற்று விட முடிகிறது. அது மட்டும் இன்றி யூடியூப் உள்ளிட்ட வீடியோ தளங்கள் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த படங்கள், பாடல்கள் என அனைத்தையும் நினைத்த நேரத்தில் கேட்டு, பார்த்துக்கொள்ளலாம்.
அசத்தல் திட்டம்: அதுபோக சமூக வலைத்தளங்கள் மூலமாக குறுஞ்செய்திகள் மூலம் டிஜிட்டல் வடிவிலான கோப்புகள் முதல் கொண்டு பரிமாறிக்கொள்ளலாம். பேங்கிங் வசதி, டிக்கெட் புக்கிங் வசதி என பல்வேறு விதமான சேவைகளுக்கும் தற்போது மொபைல் போனே முக்கியமானதாக மாறிவிட்டது. இதனால், செல்போன் இன்றைய கால கட்டத்தில் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
இன்னும் சொல்லப்போனால், இன்றைய இளைஞர்கள் பலரும் டிவிக்களையே பார்ப்பது இல்லை.. வீட்டில் வெறுமனே டிவியை ஓடவிட்டுக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் மொபைலையே பார்க்கும் இளைஞர்கள் பலரையும் காண முடிகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்... தொலைத்தொடர்பு துறையில் அடுத்த கட்ட பெரும் புரட்சி என்று சொல்லும் அளவுக்கு அசத்தலான திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் எளியாகியுள்ளது.
செல்போனில் டிவி சேனல்கள்: அதாவது, செல்போனில் இணைய வசதி இன்றி நேரடியாக டிவி பார்க்கும் வசதியை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தற்போது டிவிக்களில் டிடிஎச் சேவை மூலமாக தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வசதி இருப்பதை போல லைவ் டிவி சேனல்களை மொபைல் போனிலேயே பார்க்கும் வசதியை கொண்டு வருவது குறித்துதான் பரிசீலனை நடக்கிறது.
டைரக்ட் டூ மொபைல் (D2M) என்ற தொழில் நுட்பத்தின் மூலம் பயனார்கள் எந்த இடத்தில் இருந்தாலும் டிவி சேனல்களை நேரடியாக பார்க்க முடியும். தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகியவை இணைந்து இதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவருவதகாவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆலோசனை நடத்தப்படும்: மத்திய அரசு கொண்டு வர பரிசீலித்து வரும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் எனத்தெரிகிறது. ஏனெனில், தற்போது மொபைல் மூலமாக தொலைக்காட்சி சேனல்களை பார்ப்பதால் இணைய டேடா மூலமாக கணிசமான வருவாய் செல்போன் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. எனவே, டைரக்ட் டூ மொபைல் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் செல்போன் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும் எனவே இந்த திட்டத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பிறகே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications