"ஒரு மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்கவே முடியாது.." உச்ச நீதிமன்றத்தில் மிக தெளிவாக சொன்ன தெலுங்கானா
டெல்லி: மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்திருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு ஏற்கனவே தனது வாதங்களை முன்வைத்துவிட்ட நிலையில், இப்போது மாநில அரசுகள் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகிறது. அதன்படி இன்று தெலுங்கானா தனது வாதத்தை முன்வைத்தது. ஒரு ஆளுநருக்கு மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை என தெலுங்கனா கூறியது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு அப்போதே மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பை அளித்திருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அந்த விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. அதேநேரம் இது விளக்கக் குறிப்பு தொடர்பான விசாரணை மட்டுமே என்றும் முந்தைய உத்தரவுகளை இந்த விசாரணை மாற்றாது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது.
இந்த வழக்கில் முதலில் மத்திய அரசு தனது வாதங்களை முன்வைத்த நிலையில், தொடர்ச்சியாக மாநில அரசுகள் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் பாஜக ஆளும் மாநிலங்கள் காலக்கெடு விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் காலக்கெடு சரியானது என்ற வாதத்தை முன்வைத்து வருகிறது.
தெலுங்கானா அரசு வாதம்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தெலுங்கானா அரசு சார்பில் ஆஜரான நிரஞ்சன் ரெட்டி பல முக்கிய வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், "அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில், பல மாநிலங்களிலும் பிரிவினை போக்கு இருந்தது. ஆனால் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆபத்து இப்போது இல்லை. இச்சூழலில், ஆளுநருக்கு விருப்புரிமை இருப்பதாக அரசியலமைப்பு விதியைப் புரிந்து கொள்வது என்பது மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும். இது உகந்தது அல்ல
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை, ஒரு மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது தவறான ஆலோசனை வழங்கும் என்பது சாத்தியமற்றது... மாநிலப் பட்டியலின் கீழ் வரும் ஒரு மசோதா, ஏற்கனவே உள்ள மத்திய சட்டத்திற்கு முரணானதா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கே உண்டு.
நிறுத்தி வைக்க முடியாது
சட்டமன்றம் ஒரு சட்டமியற்றும் அமைப்பு என்பதால், மசோதாவில் எந்தவித முரண்பாடும் இல்லை என்று சட்டசபை கருதினால், வேறுபட்ட கருத்து அடிப்படையில் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது. அதேபோல, வேறுபட்ட கருத்து அடிப்படையில் ஆளுநரும் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. ஒரு மாநில மசோதா முரண்பாடானதா அல்லது அரசியலமைப்புக்கு எதிரானதா என்பதை ஆளுநர் தீர்மானிக்கவோ, அதைத் தாமதப்படுத்தவோ முடியாது" என்று அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.
தமிழ்நாடு கேரளா
முன்னதாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் காலக்கெடு நிர்ணயம் செய்தது சரியானது என்றே வாதத்தை முன்வைத்தது. மேலும், குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதை அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் என்பவர் சூப்பர் சிஎம் போலச் செயல்பட முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்றைய தினம் கர்நாடக அரசும் கேரளா அரசும் தங்கள் வாதங்களை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து பிற்பகலுக்கு மேல் பஞ்சாப் அரசும் கூட தனது வாதத்தை முன்வைத்து இருந்தது.












Click it and Unblock the Notifications