"மசோதாவை கிடப்பில் போட எந்த ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை!" உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு வாதம்! ட்விஸ்ட்
டெல்லி: ஆளுநர்கள் மசோதாக்களில் முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் முர்மு விளக்கக்குறிப்பை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் சூழலில், பல்வேறு தரப்பும் பல முக்கிய வாதங்களை முன்வைத்து வருகிறது. இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடந்த நிலையில், ஆளுநர் ஒரு மசோதாவைக் காலவரையறை இல்லாமல் நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தரப்பே கூறியிருக்கிறது.
மசோதாக்களில் ஆளுநர் முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இது தொடர்பாக ஜானதிபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக்குறிப்பை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்டில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

விசாரணை
இதில் முதலில் அனைத்து தரப்பும் தங்கள் எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்த நிலையில், பிறகு நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வருகின்றன. அதேநேரம் இது ஜனாதிபதியின் விளக்கக்குறிப்பு தொடர்பான விசாரணை மட்டுமே என்றும் இது முந்தைய உத்தரவை எந்த விதத்திலும் மாற்றாது என்றும் தலைமை நீதிபதி கவாய் விளக்கமளித்திருந்தார்.
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பினரும் ஏற்கனவே தங்கள் வாதங்களை முன்வைத்துவிட்ட நிலையில், இன்று இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா சில முக்கிய கருத்துகளை முன்வைத்தார். அதாவது ஆளுநர் ஒரு மசோதாவைக் காலவரையறை இல்லாமல் கிடப்பில் போட அதிகாரம் இல்லை என்ற அவர், அதேநேரம் இதற்குக் காலக்கெடு வகுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
அதிகாரம் இல்லை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளில், 90 சதவீத மசோதாக்களுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட எந்த மாநில ஆளுநருக்கும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை.
ஒவ்வொரு மசோதாவிற்கும் ஒவ்வொரு சூழல்கள் இருக்கும். சில சமயங்களில் நிர்வாகத்துடன் கலந்தாலோசனை செய்ய வேண்டி இருக்கும். சில நேரங்களில் மாநில அரசுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பொதுமக்கள் அழுத்தத்தால், சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்போது அரசே ஆளுநரிடம் மசோதாவை நிறுத்தி வைக்குமாறு கோரலாம்.
ஆனாலும் காலக்கெடு கூடாது
இதுபோல ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பும்போது பல சூழல்கள் உள்ளன. இது அரசியலமைப்பு ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கலந்தாலோசனையின் ஒரு பகுதியாகும். காலக்கெடுவை விதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அத்தகைய காலக்கெடுவை நிர்ணயிப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படாது" என்று சொலிசிட்டர் ஜெனரல் விளக்கினார்.
ஒரு மசோதா அரசியலமைப்பிற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் நீதிமன்றத்திற்கே இருப்பதாகவும் பல மாநிலங்கள் கூறியிருந்த நிலையில், அதை துஷார் மேத்தா மறுத்தார். மசோதாவின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசியலமைப்புக்கு எதிராக இருக்கும் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இப்படி இன்று பல்வேறு காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி கவாய் பதவிக்காலம் வரும் நவம்பருடன் முடிவடைய இருப்பதால், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications