”ஆளுநர்கள்” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல- விளாசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
டெல்லி: மாநிலங்களின் "ஆளுநர்கள்" என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல; வழக்குகள் தொடருவதற்கு முன்னரே நிலுவை மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தார். இதற்கு எதிராக பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, பஞ்சாப் மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. பஞ்சாப் சட்டசபையை கூட்டுவதற்கும் கூட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முட்டுக்கட்டையாக உள்ளார் என பஞ்சாப் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆளுநர்களுக்கு குட்டு: இந்த வழக்கு விசாரணையின் போது, ஆளுநர்கள் என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்னரே ஆளுநர் செயல்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு கூட ஒப்புதல் தர வேண்டும் என்பதற்காக மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டுமா? அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும். இதேபோல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளும் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. பஞ்சாப் மாநில அரசின் 7 நிலுவை மசோதாக்கள் மீதான நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 மாநிலங்களும் வழக்கு: பஞ்சாப் மாநில அரசைப் போலவே தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பது, சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையில் சுட்டிக்காட்டி இருந்தார். இதனால் பஞ்சாப் மாநில அரசின் வழக்கு மீதான நவம்பர் 10- விசாரணையின் போது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகள் தொடர்ந்த வழக்குகளும் விசாரணைக்கு வரக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications