தீவிரவாத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி.. தகவல் தொழில்நுட்ப துறையை வலுப்படுத்துகிறது மத்திய அரசு!
டெல்லி: தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தி, இணைய கண்காணிப்பை வலுப்படுத்துவதன் மூலம், சோஷியல் மீடியாக்களில் தீவிரவாத கொள்கைகள் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது என மத்திய உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படையின், 23வது பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் பேசியதாவது, "தீவிரவாதிகள் சமூக ஊடகங்கள் மற்றும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தை துல்லியமான தாக்குதல்களுக்கும் உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். சில நாடுகள் தீவிரவாதிகளுடன் இணைந்து மனிதநேயத்தை பாதிக்கின்றன. இதனை வேரோடு அழிக்க நடவடிக்கை அவசியம்.

ஜிஹாதி தீவிரவாதம், வடகிழக்கில் கிளர்ச்சி, போலி நாணயங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல், உற்பத்தி போன்றவற்றை தடுக்கும் வகையில் 25 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களை தடுக்க UAPA விதிகளை கடுமையாகப் பயன்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இளைஞர்களின் மனதை மாற்றும் சைபர் தாக்குதல்கள்
சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களின் மனதை மாற்றி தவறான தகவல்களை பரப்ப தீவிரவாதிகள் முயற்சி செய்கிறார்கள். இவை அரசின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது.
தீவிரவாதக் குழுக்கள் சமூக ஊடகங்களை ஆதரவாளர்களை திரட்டவும், குறியீட்டு செயலிகளைப் பயன்படுத்தி அடையாளத்தை மறைக்கவும் செய்கின்றன. இதனால் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க சிரமமாகிறது. ஆனால் இதனை முன்கூட்டியே தடுக்க முடியும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு 200 மாவட்டங்களில் இருந்த நக்சலிசம், தற்போது 20 மாவட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாதத்தை ஒழிக்க அரசு எடுத்த முயற்சிகளின் வெற்றியை காட்டுகிறது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு
பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு எதிரான மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகும். இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்தத் தாக்குதலையும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவேதான் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆபரேஷனில் முக்கிய செயல்பாட்டு தளங்களை அழித்தது இந்திய இராணுவத்தின் திறமையை வெளிப்படுத்துகிறது.
தொழில்நுட்ப தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய ஒத்துழைப்பையும் அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம். இணைய கண்காணிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் தீவிரவாதத்தை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடியை கொடுத்திருந்தது. இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்தியாவிலிருந்து சிலர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தனர். சோஷியல் மீடீயாக்களில் இப்படியான கருத்துக்கள் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து, உளவுத்துறை சார்பில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இது நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் கொடுத்த உத்தரவும் விவாதங்களை மேலும் சூடாக்கியிருந்தது. இப்படி இருக்கையில்தான் தகவல் தொழில்நுட்ப துறையை வலுப்படுத்த தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. ஆனால் இந்த முயற்சி தனியுரிமையை மீறும் செயலாக இருக்குமோ? என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications