ஒரே இரவில் 50,000 பேரை வெளியேற்றுவதா? உத்தரகாண்ட் ஹல்த்வானி வீடு இடிப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 4,000 முஸ்லிம் வீடுகளை இடிக்கும் உத்தரகாண்ட் அரசு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே இரவில் 50,000 பேரை வெளியேற்றுவதை ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 29 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பது அம்மாநில அரசின் குற்றச்சாட்டு. உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 29 ஏக்கர் ரயில்வே நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 4,000 வீடுகளை ஒருவாரத்தில் அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக ஹல்த்வானியில் குடியிருக்கும் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டங்களின் ஒரு பகுதியாக மசூதிகளில் கூட்டாக தொழுகை நடத்தினர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலேயே ஆளும் பாஜக அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டு.
ஹல்த்வானியில் பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்டவற்றை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென 4,000 வீடுகளை இடிக்க முயற்சிப்பது ஏன்? என்பது பொதுமக்களின் கேள்வி. உத்தரகாண்ட் மாநில அரசு இடிக்க திட்டமிட்டுள்ள ஹல்த்வானியில் 4 அரசு பள்ளிகள், 10 மசூதிகள், 4 கோவில்கள் உள்ளன. இவை அனைத்தையும் வரும் 9-ந் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரகாண்ட் அரசு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் இந்தப் பிரச்சனை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இசுலாமியப் பெருமக்கள் கணிசமாக வசிக்கும் நைனிடால் பகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்த காரணத்தினாலேயே பழிவாங்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்பு என்றுகூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைகிறது. ஆக்கிரமிப்பு என்றால் கடந்த ஒரு நூற்றாண்டுகளாக அவர்களை அப்பகுதியில் வசிக்க அரசு எவ்வாறு அனுமதித்தது? அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, எரிகாற்று இணைப்பு எவ்வாறு வழங்கியது? அவற்றை வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வாக்கு கேட்டு அப்பகுதிக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும்போது தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? அல்லது ஆக்கிரமிப்பு என்று தெரிந்தே அனுமதித்தீர்களா?

அம்மக்கள் அங்குக் குடியேறும்போதே வெளியேறச் சொல்லியிருந்தால் அவர்கள் வேறு இடத்திற்குக் குடி பெயர்ந்திருப்பார்கள். அதை விடுத்து மூன்று தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்து, பல்லாயிரம் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்துச் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்களது வாழ்நாள் கனவாக இலட்சக் கணக்கில் செலவழித்துக் கட்டிய வீட்டினை ஒரே நாளில் இரவோடு இரவாக இடித்து வெளியேற்றுவது என்பது கொடுங்கோன்மையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தரகாண்ட் மற்றும் ரயில்வே அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் 4,000 முஸ்லிம்கள் வீடுகளை இடிக்கும் உத்தரகாண்ட் அரசு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். அப்போது, ஒரே இரவில் 50000 பேரை வெளியேற்றுவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications