செம்ம.. அரசியலில் அடுத்த இன்னிங்க்ஸ் ஆடும் பாஜி.. மாண்புமிகு நாடளுமன்ற உறுப்பினராகும் ஹர்பஜன் சிங் ?
டெல்லி : இந்தியா, மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்காக பல இன்னிங்க்ஸ்களில் ஆடியுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான பாஜி என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் அரசியலில் தனது அடுத்த இன்னிங்க்ஸை ஆடவுள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன், 103 டெஸ்ட், 236 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார்.
மேலும், அனில் கும்ப்ளே, கபில்தேவ் மற்றும் ஆர்.அஷ்வினுக்குப் பின் நான்காவது அதிக விக்கெட்டுகளை(417) எடுத்தவர் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் 24 டிசம்பர் 2021 அன்று கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல ஐபிஎஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக அவர் பணி புரிவதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போது வெளிவரும் செய்திகளின்படி, பஜ்ஜி இப்போது அரசியலில் ஈடுபடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல்வர் பகவந்த் மான் மாநிலத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல விளையாட்டு வீரர்களை ராஜ்யசபாவுக்கு அனுப்ப அம்மாநில அரசு ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. பஞ்சாப்பில் இருந்து ஹர்பஜன் சிங்கை ராஜ்யசபாவுக்கு அனுப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தேர்தல் பிரசாரத்தின் போது ஜலந்தரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த தகவல்களின் படி, பகவந்த் மான் ஹர்பஜன் சிங்குக்கு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பொறுப்பையும் வழங்கலாம் என யூகங்கள் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவைக்கு தேர்தல்
பஞ்சாபில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாபில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 21 மற்றும் மார்ச் 22 அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆம் ஆத்மி பலம்
வாக்கு எண்ணும் பணி அதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 18 இடங்கள் காங்கிரஸின் கைகளில் உள்ளது. அகாலிதளம் மூன்று இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி பஞ்சாபில் உள்ள ஐந்து ராஜ்யசபா பதவிகளையும் ஆம் ஆத்மி கட்சியே கைப்பற்றும்.

முதல்வருக்கு வாழ்த்து
முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மார்ச் 10 ஆம் தேதி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பகவந்த் மான் வெற்றி பெற்றதற்கு ட்வீட் செய்திருந்தார். அவர் பகவந்த் மானின் தாயைக் கட்டியணைத்த நெகிழ்ச்சியான படத்தைப் பகிர்ந்து , "ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது நண்பர் பகவந்த் மானுக்கும் வாழ்த்துக்கள். அவரது மாதாஜிக்கு இது பெருமையான தருணம்." என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தான் ஹர்பஜன் சிங் மாநிலங்களை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications