கீதையின் நிலத்தில் உண்மை, வளர்ச்சி வென்றுள்ளது.. ஹரியானா தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி பூரிப்பு
டெல்லி: ஹரியானாவில் வரலாற்றில் முதல் முறையாக பாஜக தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது என்றும், கோவா, மத்தியபிரதேசை தொடர்ந்து தற்போது ஹரியானாவிலும் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கீதை நிலத்தில் உண்மை, வளர்ச்சி வென்றுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஹரியானா மாநிலத்தில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:

ஹரியானாவில் இதுவரை எந்த ஒரு கட்சியும் ஹாட்ரிக் வெற்றி பெறவில்லை. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக ஹரியானாவில் தொடர்ச்சியாக 3 முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநிலம் கடந்த 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை ஹரியானாவில் 13 சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 10 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு கட்சி அடுத்த முறை வெற்றி பெற்றதில்லை.

முதல் 10 சட்டமன்ற தேர்தல்களில் ஒரே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. ஆனால் பாஜக இதனை மாற்றியது. அதோடு ஹாட்ரிக் வெற்றியையும் பெற்றுள்ளது. அதிக வாக்குகளையும் பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாவது முறை வாய்ப்பு கொடுப்பதில்லை. கோவா, மத்திய பிரதேஷ் மற்றும் ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. கீதையின் நிலத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ பின்தங்கி விட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. காங்கிரஸ் வெற்றி பெற மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. வளர்ச்சியின் நான்கு தூண்கள் தான் பாஜகவின் இலக்கு ஆகும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகள். இவை நான்கும் தான் வளர்ச்சியின் தூண்கள். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அவற்றை வலுப்படுத்துவதே பாஜகவின் முதன்மை இலக்காகும்.













Click it and Unblock the Notifications