ஒதுக்கப்பட்ட "சர்ச்சை" தலைவர்கள்.. பாஜக எடுத்த தீர்க்கமான முடிவு.. வேட்பாளர்கள் லிஸ்டில் இதை பாருங்க
டெல்லி: பாஜகவின் வேட்பாளர் லிஸ்டில் சர்ச்சை தலைவர்கள் அனைவரையும் பாஜக ஒதுக்கித் தள்ளி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன.. பாஜக பிளான் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலுக்கான 195 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில், இதில் மிஸ்ஸான தலைவர்கள் பெயர்கள் தான் இப்போது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக பிரக்யா தாக்கூர், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா மற்றும் ரமேஷ் பிதுரி ஆகியோரும் மிஸ்ஸிங்.

இந்த மூன்று தலைவர்களும் கடந்த காலங்களில் பல முறை செய்திகளில் இடம்பிடித்தார்கள். ஆனால், நல்ல காரணத்திற்காக இல்லை. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பின. எதிர்க்கட்சிகள் இவர்களைக் குறிவைத்து ஒரு பிரச்சாரம் செய்யும் என்பதை உணர்ந்த பாஜக, அவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.
பிரக்யா தாக்கூர்: கடந்த 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பிரக்யா தாக்கூர். அவர் கடந்த முறை போபாலில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை போபால் பாஜக வேட்பாளராக அலோக் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறையே இவரை பாஜக வேட்பாளராக அறிவித்த போது கடும் எதிர்ப்ப கிளம்பியது. இருப்பினும், தேர்தலில் வென்ற இவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
குறிப்பாக மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை அவர் "தேசபக்தர்" என்று கூறியது நாடு முழுக்க சர்ச்சையானது. இந்தக் கருத்துக்குப் பிரதமர் மோடி கூட கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, "காந்திஜி அல்லது நாதுராம் கோட்சே பற்றிக் கூறிய கருத்துக்கள் சமூகத்திற்கு மிகவும் மோசமானவை மற்றும் மிகவும் தவறானவை. அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட அவரை என்னால் முழுமையாக மன்னிக்க முடியாது" என்று காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி இந்தளவுக்குக் காட்டமான கருத்தைத் தெரிவித்த பிறகும் அவருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்து இருந்தால் தான் ஆச்சரியம். இது தவிர அவர் மேலும் பல சர்ச்சை மற்றும் வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது போக அவர் தனது தொகுதியிலும் பெரியளவில் ஆக்டிவாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த இரண்டும் தான் பிரக்யா தாக்கூருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்காமல் இருக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
பர்வேஷ் சாஹிப்: மேற்கு டெல்லி எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவும் இந்த லிஸ்டில் இல்லை. இரண்டு முறை எம்பியான இவர் மறைந்த முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவர். இவருக்கு ஆதரவு கணிசமாக இருந்தாலும், இவர் கூறிய சர்ச்சை கருத்துகளே இவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது. 2020 டெல்லி தேர்தலுக்கு முன்னதாக, ஷஹீன் பாக் போராட்டத்தின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் போராட்டம் செய்பவர்கள் அகற்றப்படுவார்கள் எனச் சர்ச்சையைக் கிளப்பினார்.
கடந்த 2022இல் அவர் மீண்டும் முஸ்லிம்களை டார்கெட் செய்யும் வகையில் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். அதாவது இஸ்லாமியர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அப்போது தான் பிரச்சினை சரி ஆகும் என்று பேசியிருந்தார். இப்படித் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பிய பர்வேஷ் சாஹிப் சிங்கிற்கு ஆதரவு இருந்தாலும் கூட அவருக்கு மீண்டும் பாஜக வாய்ப்பு தரவில்லை.
ரமேஷ் பிதுரி: அதேபோல தெற்கு டெல்லி எம்பி ரமேஷ் பிதுரி கடந்த ஆண்டு செப்டம்பரில் மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, டேனிஷ் அலிக்கு எதிராக இஸ்லாமோபோபிக் கருத்துகளைக் கூறியிருந்தார். அவர் சொன்ன கீழ்த்தரமான கருத்துகள் வீடியோவில் பதிவாகி டிரெண்ட் ஆனது. தனது கருத்துகளை ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்டலும் கூட, அவரது பேச்சு இப்போது அவருக்கு எதிராக மாறி இருக்கிறது. அவருக்கான வாய்ப்பை பாஜக மறுத்துள்ளது.
அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலிலும் யாரெல்லாம் பாஜகவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்களோ அவர்களுக்கு வாய்ப்பை பாஜக மறுக்கும் என்றே தெரிகிறது. இந்தத் தேர்தலை மோடியின் கனவான 'Viksit Bharat @2047' என்ற முழக்கத்தோடு எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் சர்ச்சை எம்பிகளை தயவு தாட்சணம் இல்லாமல் ஒதுக்கித் தள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications