அனைத்து மதங்களுக்கும்.. பொதுவான ஒரு எதிரி "வெறுப்புணர்வு" மட்டுமே.. உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: அனைத்து மதங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரே ஒரு எதிரி வெறுப்புணர்வு மட்டுமே என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் இந்து அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பலர் பேசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் சில இந்து அமைப்புகளும் தங்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுகள் பேசப்படுவதாக கூறி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வெறுப்பை விதைக்கும் பேச்சுகள்
இந்தியாவில் சமீபகாலமாகவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், மதத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. நாட்டில் உள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்த வேண்டும்.. முஸ்லிம்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என பல மத மாநாடுகளில் பகிரங்கமாவே பேசப்பட்டன. அண்மையில் கூட, பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர், இந்துக்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற பேச்சுகள், சாதாரண மக்கள் மனதிலும் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பை விதைத்துவிடும் தன்மைக் கொண்டது. இதுவே மத ரீதியிலான கலவரங்கள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் மனு
இதனிடையே, டெல்லியை சேர்ந்த ஷாகின் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், "ஹரியானாவின் மேவாட் பகுதியில் பஜ்ரங் தள அமைப்பு சார்பில் சில தினங்களுக்கு முன்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது, இந்து மதத்தை ஈட்டியை ஏந்தி பாதுகாப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பலர் பேசினர். இதுபோன்ற பேச்சுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இத்தனை மோசமாக பேசிய பிறகும் கூட, அவர்கள் மீதும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் ஹரியானா போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"அனைத்தும் வெறுப்பு பேச்சுகள் அல்ல"
இந்த மனுவானது, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "நம்மிடம் வெறுப்பு பேச்சுகள் என்றால் என்ன என்பதற்கான வரையறை சரியாக இல்லை. முதலில், வெறுப்பு பேச்சுகள் எவை என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம். அதே சமயத்தில், அனைத்து பேச்சுகளையும் வெறுப்பு பேச்சுகளாக நாம் கருதக்கூடாது.

"அனைத்து மதங்களுக்கும் எதிரி"
முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளை சேர்ந்த பலரும் கூட தங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வெறுப்பு பேச்சுகளை பேசியதாக மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். எனவே, வெறுப்பு பேச்சுகள் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக வரும் மார்ச் 21-ம் தேதி விசாரிக்கப்படும். நமது நாகரீகமும், அறிவும் எல்லையற்றது. அவற்றை வெறுப்பு பேச்சுகள் மூலம் நாம் சிறுமைப்படுத்த கூடாது. அனைத்து மதங்களுக்கும் பொதுவான எதிரியே இந்த வெறுப்புணர்வு தான். மனதில் இருந்து வெறுப்பை அகற்றுங்கள். பின்னர் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications