டெல்லிக்கே இந்த நிலையா? வீடுகளுக்குள் வெள்ளம்.. நாடாளுமன்றம் செல்ல முடியாமல் தவித்த எம்பிக்கள்
டெல்லி: டெல்லியில் வெப்பம் கடுமையாக வாட்டி வதைத்ததால் மக்கள் மழை பெய்ய வேண்டி தவித்தனர். இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் டெல்லியில் தங்கியிருந்த எம்பிக்களே நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டது. வீடுகளை சுற்றிலும் முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் எம்பிக்கள் சமாஜ்வாடி எம்பி ராம்கோபால் யாதவ், சசி தரூர் அவதியடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு வெப்பம் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால், அங்கு தண்ணீர் தட்டுப்பாடும் எற்பட்டது. வெப்பம் தணிந்து எப்போது மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று மழை வெளுத்து வாங்கியது.

நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால், டெல்லி மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வரை டெல்லியில் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிகிறது. கனமழையால் சாதாரண மக்கள் மட்டும் இன்றி மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது நாடளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் எம்பிக்கள், அமைச்சர்கள் பலரும் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் தங்கியுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையால் எம்பிக்கள், அமைச்சர்கள் தங்கியிருந்த வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், நாடாளுமன்றத்திற்கு கிளம்பிய எம்பிக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் டெல்லியில் உள்ள தனது வீட்டை வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், "இன்று காலையில் விழித்து பார்த்ததும் எனது வீடு முழுக்க ஒரு அடி உயரத்தில் தண்ணீர் சூழ்ந்திருந்தது. அனைத்து அறைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தண்ணீர் வடிய இடம் இல்லாத நிலை. காலையில் இருந்தே மின்சாரமும் தடை பட்டுள்ளது. வீட்டை சுற்றியிருந்த தண்ணீர் மோட்டார் பம்ப் மூலமாக வெளியேற்றப்பட்டது. இதனால், நாடாளுமன்றத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடிந்தது" என்று கூறியுள்ளார். அதேபோல, சமாஜ்வாடி எம்பி ராம்கோபால் யாதவ் வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது.
லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள அவரது பங்களாவை சுற்றிலும் தண்ணீர் முட்டி அளவுக்கு தேங்கி நின்றது. இதனால், ராம் கோபால் யாதவை அவரது கார் வரை ஊழியர்கள் தோளில் சுமந்து சென்றனர். இது தொடர்பான வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.
சமாஜ்வாடி எம்பி இது குறித்து கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன்பு தான் எனது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. தற்போது வெள்ளம் சூழ்ந்த நிலையில், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி இல்லத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications