தக்காளி வாங்க லோன் தான் போடணும் போலயே! ரூ.200 தொட்டதால் ஷாக்! இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லையாம்
டெல்லி: தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டெல்லி உட்பட நாட்டின் சில பகுதிகளில் தக்காளியின் சில்லறை விலை 200 ரூபாயைத் தொட்டுள்ளது.
இடைவிடாத மழையால் தக்காளி விநியோகம் தடைப்பட்டுள்ளது. விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தக்காளி மட்டுமின்றி விரைவில் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குத் தண்ணீர் தேங்கியுள்ளன. இது தக்காளி பயிர்கள் மற்றும் நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளான வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை கடுமையாகப் பாதிக்கிறது. இதுவும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

தக்காளி: திங்கள்கிழமை தக்காளியின் சராசரி விலை சில்லறை விலை ஒரு கிலோவுக்கு 104.38 ஆக இருந்தது, அதிகபட்சமாக ராஜஸ்தானின் ஸ்வாய் மாதோபூர் ஒரு கிலோ 200ஐ கடந்து விற்பனையானது. அதே ராஜஸ்தானில் சுரு என்ற பகுதியில் குறைந்தபட்சமாக ரூ 31க்கு தக்காளி விற்பனையாகியுள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாகக் கொல்கத்தாவில் தக்காளி ரூ.149க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ரூ.135க்கும், சென்னையில் ரூ.123க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை என்பது தரம் மற்றும் விற்கப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் டெல்லியில் தக்காளி வரத்து மேலும் குறைந்துள்ளது. கனமழை தொடர்ந்து வரும் நிலையில் தக்காளி விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை" என்றார்.
என்ன காரணம்: திங்கள்கிழமை மொத்த விற்பனை சந்தையிலேயே பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 160 ரூபாய் என்ற ரேஞ்சிலேயே இருந்தது. இமாசல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்தே தக்காளி அதிகம் வரும். இதில் இமாசல பிரதேசத்தில் இப்போது கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கமானது என்றாலும் சில நாட்களில் இந்தளவுக்கு உயரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
ரூ.200 தொடும் தக்காளி: தலைநகர் டெல்லியில் இருக்கும் வியாபாரி ஒருவர் கூறுகையில், "இங்கே மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ 150- 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இங்கே சில வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.200க்கும் கூட விற்பனை செய்கிறார்கள். வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை சீராகும்" என்று அவர் தெரிவித்தார்.
தக்காளி மட்டுமின்றி வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், இஞ்சி என கிட்டதட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது பெரும்பாலான காய்கறிகள் கிலோ 60 ரூபாய்க்கு மேல் தான் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சி விலை கடந்த இரண்டு வாரங்களில் கிலோ ரூ.240ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.
மேஜர் காரணம்: இமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இது செடிகளைப் பாதித்துள்ள நிலையில் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும், கனமழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரத்தும் குறைந்துள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து தான் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சம் தொடக் காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications