ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது- 2 மாதங்களில் 2 மாநில முதல்வர்கள் கைது!
டெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து 2 மாதங்களில் 2-வது மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இவ்வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனடிப்படையில் விசாரணைக்கு ஆஜரானர் ஹேமந்த் சோரன். இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ36 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றது.

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு திரும்பிய ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 6 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை. இதனால் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் தற்போது சாம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இதேபோல டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இந்த பின்னணியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனடிப்படையில் இன்று டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் 2 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க இருக்கும் நிலையில் இன்று அதிரடியாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications