இந்தி ஏகாதிபத்தியம் என்பது இந்தியாவுக்கான சாவு மணி! ஜாக்கிரதை.. காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்
டெல்லி: ‛‛இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தி ஏகாதிபத்தியத்தை உருவாக்குவது என்பது இந்தியாவுக்கான சாவு மணியை அடிக்கும்'' என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்தியில் பாஜக அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தி மொழி மீதான மத்திய அரசின் பிரியத்துக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றர்.
இந்நிலையில் தான் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமித்ஷா பேசியது என்ன
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37 வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, ‛‛அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக கொண்டு வர வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்'' என்றார்.

தமிழகம், கர்நாடகம் எதிர்ப்பு
இதற்கு தமிழகம், கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, சு வெங்கடேசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையாக, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக இந்தி மொழிக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கான சாவு மணி
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‛‛இந்தி என்பது அலுவல் மொழி தான். அது தேசிய மொழியல்ல என உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் கூறினார். இந்திக்கான ஏகாதிபத்தியம் என்பது இந்தியாவுக்கான சாவு மணியாக இருக்கும். எனக்கு ஹிந்தி வசதியாக இருக்கிறது. ஆனால் அதை கட்டாயப்படுத்தி ஒருவரின் தொண்டையில் திணிக்க நான் விரும்பவில்லை. இத்தகைய செயலை செய்யும் அமித்ஷா இந்திக்கு அவமரியாதை செய்கிறார்'' என்றார்.

பணவீக்கத்தை குறைக்குமா
இதேபோல், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிேஷக் சிங்வி கூறுகையில், ‛‛நான் இந்தி மொழியில் சிறந்த ஆதரவாளன். ஆனால் இந்தியை ஒருவரிடம் திணிப்பதில் விருப்பம் இல்லை. வெறுப்புணர்வு அரசியல், பிரிவினை அரசியலிலும் எனக்கு விருப்பம் இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி பிரசாரம் என்பது இந்தியாவின் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்குமா. இல்லவே இல்லை. இத்தகைய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்தி பிரசாரத்தை துவக்கி உள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு உபதேசம் வழங்க வேண்டாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications