இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நிதி மறுப்பு-நாடாளுமன்றத்தில் நாளை எதிர்க்கட்சிகள் 'சம்பவம்'!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை திங்கள்கிழமை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத் தொடரில் மும்மொழிக் கொள்கை, இந்தி மொழி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளை குறைப்பது, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது மற்றும் போலி வாக்காளர்கள் விவகாரத்தை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை தர எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி ஜனதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2025-26-ஐ தாக்கல் செய்தார். இதனையடுத்து பிப்ரவரி 13-ந் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்தது.

parliament dmk cogress bjp

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை மார்ச் 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த 2-வது கூட்டத் தொடர் அமர்வானது ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறும்.

எதிர்க்கட்சிகளின் வியூகம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில், மும்மொழிக் கொள்கை, இந்தி மொழி திணிப்பு, மாநிலங்களுக்கான நிதி தர மறுப்பது, போலி வாக்காளர்கள் விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நெருக்கடி தர இருக்கின்றன எதிர்க்கட்சிகள். இதனை எதிர்கொள்ள பாஜக கூட்டணியும் தயாராக உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- முதலாவது அமர்வில் நடந்தது என்ன?

முதலில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பான உரையை நிகழ்த்தியதாக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ராகுல் காந்தி தமது உரையில், கடந்த கால ஜனாதிபதி உரைகளைப் போலவே தற்போதைய ஜனாதிபதி உரையும் சலவைக்கு அனுப்பும் துணிகளின் பட்டியலைப் போல இடம் பெற்றிருக்கிறது; ஜனாதிபதி உரை என்பது நடந்தவைகளை திரும்ப திரும்ப சொல்வதற்கானது அல்ல. வேலை இல்லா திண்ட்டாட்ட விவகாரத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசும் தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இளைஞர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்; பிரதமர் மோடி முன் மொழிந்த மேக் இன் இந்தியா திட்டம் நல்ல யோசனைதான்; ஆனால் 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது; உற்பத்தித் துறையில் சரியான ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாம் 2025-ம் ஆண்டில் இருக்கிறோம். 21-ம் நூற்றாண்டின் 25% பகுதியை கடந்துவிட்டோம். ஜனாதிபதி உரையை வரிக்கு வரி படித்துப் பார்த்தால் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கம் தரக் கூடியதாக இருக்கும். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். பாஜக ஆட்சியில் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தந்துள்ளோம். அதேபோல 12 கோடி கழிவறைகளை கட்டித் தந்துள்ளோம். நாங்கள் பொய்யான முழக்கங்களை எழுப்பவில்லை; உண்மையான வளர்ச்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று பொழுது போக்குக்காக போட்டோ எடுக்கிறவர்களுக்கு ஏழைகளைப் பற்றிய ஜனாதிபதி உரை சலிப்பூட்டுவதாகவே இருக்கும் என்றார்.

பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து

இதேபோல பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும். இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது. இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்கள் வளர்ந்த இந்தியா என்ற குறிக்கோளை முன்னெடுப்பார்கள். இந்த பட்ஜெட், சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் வலிமைக் கொண்டது. மக்களின் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்.

பொதுவாக, பட்ஜெட்டின் கவனம் அரசின் கருவூலத்தை எவ்வாறு நிரப்புவது என்பதில் இருக்கும். இருப்பினும், இந்த பட்ஜெட் மக்களின் பைகளை எவ்வாறு நிரப்புவது, அவர்களின் சேமிப்பை எவ்வாறு அதிகரிப்பது, நாட்டின் வளர்ச்சியில் அவர்களை எப்படி பங்காளிகளாக்குவது என்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த பட்ஜெட் இந்த இலக்குகளுக்கு அடித்தளம் அமைக்கிறது..

இந்த பட்ஜெட்டில் சீர்திருத்தங்களை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு,. எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு சிவில் அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை உறுதி செய்யும். பட்ஜெட்டில் அனைத்து வேலைவாய்ப்புத் துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டுமானத்திற்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது இந்தியாவில் பெரிய கப்பல்களின் கட்டுமானத்தை அதிகரிக்கும். தற்சார்பு இந்தியா இயக்கத்தை துரிதப்படுத்தும். மேலும் உள்கட்டமைப்பு பிரிவின் கீழ், 50 சுற்றுலா தலங்களில் ஹோட்டல்களைச் சேர்க்கும். சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்துவதோடு, மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையான விருந்தோம்பல் துறைக்குப் புதிய ஆற்றலை வழங்கும். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் நாடு முன்னேறி வருகிறது. ஞான பாரதம் இயக்கம் தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்திய அறிவு மரபுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும் என கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமன்- தமிழக எம்பிக்கள் மோதல்

இதேபோல பட்ஜெட் மீதான விவாதங்களின் போது தமிழ்நாட்டின் திமுக எம்பிகளுக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான முயற்சியாகும். இதில், தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன; வரிக் கொள்கைகளில் எவ்வித முக்கிய மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை; வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் வகையில், வரி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை; சிக்கலான மொழிநடை தவிர்க்கப்பட்டுள்ளது; மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ள விதிப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி நிறைவடைந்தது. அப்போது பேசிய லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 17 மணி நேரம் 23 நிமிடங்கள் விவாதங்கள் நடைபெற்றன. 173 உறுப்பினர்கள் இரவிலும் கருத்துகளைப் பதிவு செய்தனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+