"அமெரிக்க அதிபருக்கு அறிவே இல்லை.." அன்று டிரம்ப்பிற்காக யாகம் செய்த இந்து சேனா.. இன்று கடும் தாக்கு
டெல்லி: டிரம்ப் அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஒரு காலத்தில் பூஜை, யாகம் எல்லாம் நடத்திய இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, இன்று அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார். டிரம்ப்பின் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள விஷ்ணு குப்தா, டிரம்ப் தனது அறிவையே இழந்துவிட்டார் எனச் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, இந்தியா-அமெரிக்க உறவுகள் வலுவடையும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் உறவுகளைப் பாதிப்பதாகவே இருக்கிறது.

டிரம்ப்
இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தலைவர்களும் டிரம்ப்பைக் கடுமையாகவே விமர்சித்து வருகிறார்கள். அப்படித் தான் ஒரு காலத்தில் டிரம்ப்பை ஹீரோ என அழைத்த இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, இப்போது டிரம்பை அறிவே இல்லாதவர் என விமர்சிக்கிறார். விஷ்ணு குப்தா மட்டுமல்ல.. டிரம்ப் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை உணராமல் புகழ்ந்த அனைவருமே இன்று அவரை திட்டியே வருகிறார்கள்.
டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மிக முக்கியமான அறிவிப்பில் கையெழுத்திட்டார். அதாவது புதிய H1-B விசா விண்ணப்பதாரர்களுக்கான கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தி, அவர் உத்தரவிட்டார். இது பல இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு மரண அடியாக அமைந்தது. ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பல்வேறு சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவே இருக்கிறது.
இந்து சேனா
இந்த அறிவிப்புக்கு பிறகே விஷ்ணு குப்தா டிரம்ப்பை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார். முன்பு இதே விஷ்ணு குப்தா தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெல்ல வேண்டும் எனப் பிரார்த்தனை, ஹோமங்கள் நடத்தி இருந்தார். மேலும், டிரம்ப் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பிறந்தநாள் கேக் கூட வெட்டியவர். ஆனால், இன்று டிரம்ப்பின் நடவடிக்கைகளால் விஷ்ணு அதிருப்தி அடைந்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்ததால், டிரம்ப் வெற்றிக்கு நாங்கள் பிரார்த்தனை செய்தோம். இஸ்லாமியப் பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்து சேனா விரும்புகிறது.. அதனால்தான் அவரை அமெரிக்கத் தேர்தலில் ஆதரித்தோம்.. டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் (2016-20) பல நடவடிக்கைகளை எடுத்தார். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்த உதவிகளை நிறுத்தினார். மேலும் பல விஷயங்களில் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டார்.
ஏமாற்றம்
ஆனால், இப்போது டிரம்ப் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானுடன் அவர் நெருக்கம் காட்டுகிறார். இதை பார்த்து நாங்கள் மனமுடைந்து போனோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவோம் என்ற வாக்குறுதியுடன் டிரம்ப் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று அவர் பாகிஸ்தானைக் கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்றார்.
மேலும், இந்தியர்கள் அமெரிக்கப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும் அமெரிக்காவைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும், "இப்போது இந்தியர்கள் புதிய ஐபோன் வாங்க வரிசையில் நின்றனர். அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். இப்போது நமக்கு ஏன் ஐபோன் தேவை? அமெரிக்கப் பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
சீக்கிரம் எல்லாம் மாறும்
அதேநேரம் இப்போது இந்தியா அமெரிக்கா இடையே இருக்கும் மோதல்கள் தற்காலிகமானவையாகவே இருக்கும். அமெரிக்காவுடனான உறவு எதிர்காலத்தில் மேம்படும்.. அவற்றைத் தீர்க்க முடியும். வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த விஷயம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.
டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த பிறந்தநாளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "டிரம்ப் நீண்ட காலம் வாழவும், தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக மீண்டும் நிற்கவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம். ஒருவேளை அவர் இந்தியா உடனான மோதல் போக்கை முடித்துக் கொண்டால் நிச்சயம் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications