பாகிஸ்தானின் "ஹனி டிராப்"பில் சிக்கிய வெளியுறவு அமைச்சக ஊழியர்.. கைது செய்த டெல்லி போலீஸ்.. பரபர தகவல்
டெல்லி: பாகிஸ்தானுக்கு பல்வேறு முக்கிய உளவுத்தகவல்களை அளித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் டிரைவராக பணியாற்றும் ஊழியர் ஒருவரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல்களை அனுப்பியதாக வெளியுறவுத்துறை அலுவலக டிரைவர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் தொல்லை கொடுத்து வருகிறது.
ஒருபக்கம் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி.. ஆயுத உதவி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் பணிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தானின் வஞ்சக வேலை
பாகிஸ்தானின் இந்த வஞ்சக வேலையை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் நமது நாட்டு ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர். இருந்தாலும் பாகிஸ்தான் அடங்கியபாடில்லை. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய ரகசிய தகவல்களை பெற பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.

ஹனி டிராப் எனப்படும்..
அந்த வகையில், பாகிஸ்தானில் இருந்து பூனம் ஷர்மா அல்லது பூஜா என்ற போலியான பெயரில் அணுகிய உளவாளி ஒருவரின் வலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் டிரைவராக பணியாற்றும் ஊழியர் ஒருவர் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஹனி டிராப் எனப்படும் இந்த நூதன ஏமாற்று வலையில் வீழ்ந்த வெளியுறவுத்துறை அமைச்சக டிரைவர் பல்வேறு முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் உளவாளியிடம் பகிர்ந்து இருக்கிறார். பணம் பெற்றுக்கொண்டும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

டிரைவரை கைது செய்த போலீசார்
இது தொடர்பான தகவல்களை இந்திய பாதுகாப்பு முகமைகள் கண்டறிந்தன. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு மிகவும் ரகசியமான அதி முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பகிர்ந்த டிரைவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் வைத்து பாகிஸ்தான் நபருக்கு ரகசிய ஆவணங்களை அனுப்பிய டிரைவரை டெல்லி போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு யாரும் சிக்கியிருக்கிறார்களா?
தற்போது கைது ஆகியிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சக டிரைவரை போல வேறு எந்த ஊழியர்களும் இதே போன்று வழக்கில் சிக்கியிருக்கிறார்களா? என்று டெல்லி போலீசாரும் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில்
கடந்த ஆகஸ்ட் மாதம் பக்சந்த் (வயது 46) என்பவரை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் ராஜஸ்தான் போலீசார் டெல்லியில் கைது செய்து இருந்தது நினைவிருக்கலாம். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட பக்சந்த் தனது குடும்பத்தினருடன் 1998 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்து இருக்கிறார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

உறவினர்கள் மூலம்
டெல்லியில் டாக்சி டிரைவராக பணியாற்றி வந்த பக்சந்த், பாகிஸ்தானில் இருந்த தனது உறவினர்கள் மூலமாக அங்குள்ள சிலரிடம் தொடர்பில் இருந்து வந்து இருக்கிறார். பாகிஸ்தானுக்கு பல்வேறு தகவல்களையும் அவர் அளித்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார் கைது செய்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications