"நான் அபுதாபி இளவரசர்.." டெல்லி சொகுசு ஹோட்டலில் உல்லாச வாழ்க்கை.. கடைசியில் கம்பி நீட்டிய இளைஞர்
டெல்லி: இந்த நவீனக் காலத்தில் மோசடி பேர்வழிகள் புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அப்படித்தான் டெல்லியில் ஒருவர் வகை வகையாகக் கதை சொல்லி சொகுசு ஹோட்டலில் தங்கிவிட்டு.. கம்பி நீட்டியுள்ளார்.
இந்த நவீனக் காலத்தில் வங்கி, ஹோட்டல்கள் என அனைத்திலும் பாதுகாப்பு அதிகரித்தே வருகிறது. இதனால் மோசக்காரர்களால் எந்தவொரு மோசடியையும் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், உண்மையில் நிலைமை அப்படி இல்லை. இந்த நவீனக் காலத்தில் தான் புதிய டெக்னாலஜிக்களை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் அதிகப்படியான மோசடிகளைச் செய்து வருகிறார்கள்.

தொழில்நுட்பம்
ஹாலிவுட்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் கேட்ச் மீ இப் யூ கேன் என்ற திரைப்படம் உருவாகியிருக்கும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் தொழில்நுட்பம் வளராத போது.. ஆள்மாறாட்டம் போல ஒருவர் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பசை விளக்கியிருந்தார்கள். இப்போது விரல் நுணியில் தொழில்நுட்பம் வந்துவிட்ட போதிலும், இப்போதும் அந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அபுதாபி அரசு குடும்பம்
அப்படியொரு நிகழ்வு தான் நமது தேசிய தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது... அங்குள்ள ஒரு சொகுசு ஹோட்டலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒருவர் தன்னை அபுதாபி அரசு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் போலக் காட்டிக் கொண்டுள்ளார். அபுதாபி அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஹோட்டல் நிர்வாகமும் அவரிடம் பெரிதாக எதையும் கேட்காமல் பெரிய ரூமை ஒதுக்கி வந்துள்ளனர். சுமார் 4 மாதங்கள் இப்படியே தங்கிய அந்த நபருக்கு பில் மட்டும் 23 லட்சம் ஆகியுள்ளது. அதன் பிறகு அவர் நைசாக மாயமானதாகக் கூறப்படுகிறது.

சொகுசு விடுதி
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகத்தின் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அபுதாபி அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் போல நடித்து ஏமாற்றிய முகமது ஷெரீப்பை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். இந்த முகமது ஷெரீப் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி லீலா பேலஸுக்கு சென்றுள்ளார். தன்னை அரசு குடும்பத்தினரைப் போலக் காட்டிக் கொண்டு ரூம் எடுத்துள்ளார். அங்கு ரூம் நம்பர் 427ஐ எடுத்துள்ளார்..

நான்கு மாதங்கள்
நான்கு மாதம் சொகுசு ஹோட்டலில் பணக்கார வாழ்க்கை வாழ்ந்த முகமது ஷெரீப் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அமைதியாக வெளியேறிவிட்டார்.. மேலும், ஹோட்டலில் இருந்த பல விலையுயர்ந்த பொருட்கள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் விலையுயர்ந்த தட்டு உள்ளிட்ட பல பொருட்களையும் அவர் எடுத்துச் சென்றதாக ஹோட்டல் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இவர் ஒரு மோசடி பேர்வழி என்பதை நான்கு மாதங்களில் ஒருமுறை கூட ஹோட்டல் ஊழியர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றியுள்ளார்.

அரசு இளவரசர்
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹோட்டலுக்கு வந்தபோது, ஷெரீப் ஊழியர்களிடம் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவன் என்றும், அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபலாஹ் பின் சயீத் அல் நஹ்யானுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவன் என்று சொல்லியுள்ளார். ஷேக்குடன் தனிப்பட்ட முறையில் வேலை செய்துள்ளதாகவும் அரசு முறை பயணமாகவே இந்தியா வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அரசு முறை பயணம் என்பதால் அரசு சார்பில் பணம் நிச்சயம் வந்துவிடும் என்று நம்பியே உள்ளே அனுமதித்துள்ளனர்.

நம்பிய ஊழியர்கள்
அவர்களை நம்ப வைக்க விசிட்டிங் கார்டையும் கொடுத்துள்ளார் இது மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை அட்டை உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் கூட கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்த்த பிறகே நம்பி அவருக்கு ஹோட்டல் அறையை ஒதுக்கியுள்ளனர். இது மட்டுமின்றி ஹோட்டல் ஊழியர்களை நம்ப வைக்க அவர் அவ்வப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எப்படி இருக்கும் என்பது குறித்த கதைகளையும் ஊழியர்களிடம் அடித்து விடுவாராம். இதையெல்லாம் கேட்டே ஹோட்டல் ஊழியர்கள் அவரை நம்பிவிட்டனர்..

வழக்குப்பதிவு
நான்கு மாதங்கள் அவர் அந்த ரூமில் தங்கியுள்ளார். இதற்காக மொத்த பில் ரூ 35 லட்சம் ஆகும்.. அதில் அவர் 11.5 லட்சத்தை மட்டுமே செலுத்தியுள்ளார். மீதி தொகையைச் செலுத்தாமல் கடந்த நவ. மாதம் அவர் மாயமாகிவிட்டாராம். கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஓட்டலில் இருந்து காலி செய்யும் போது.. ₹20 லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்துள்ளார். இருப்பினும், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அது திரும்ப வந்துவிட்டது. அந்த நபரை மொபைல் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதன் பின்னரே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்த அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications