ரூ.53 லட்சம் வீட்டு கடனை.. வெறும் 6 ஆண்டுகளில் கட்டி முடித்த இளைஞர்! பல லட்சம் சேமிச்சு இருக்காரு
டெல்லி: ஹோம் லோன் எடுத்து அதைப் பல ஆண்டுகளாக கட்டமுடியாமல் கஷ்டப்படும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஆனால், ஐடி துறையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் 53 லட்சம் ரூபாய் ஹோம் லோனை வெறும் ஆறு ஆண்டுகளுக்குள் கட்டி முடித்துவிட்டாராம். தனது தனிப்பட்ட சாதனை என்று சொல்லி அவர், இதைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வெறும் 6 ஆண்டுகளில் ரூ.53 லட்சம் ஹோம் லோனை முடித்தது என்பது நிஜமாகவே பெரிய விஷயம் தான். மற்றவர்களுக்கும் தனது திட்டம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் பெரிய தொகையைச் சேமிக்க முடியும் என்று சொல்லி அவர் இதைப் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், "எனது தனிப்பட்ட சாதனையையும், மற்றவர்களுக்கு உதவக்கூடிய சில பாடங்களையும் நான் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ரூ.53 லட்சம் வீடு
கடந்த செப்டம்பர் 2019ல் 53 லட்சம் ரூபாய் வீட்டை ஹோம் லோன் எடுத்து வாங்கினேன். நவம்பர் 2025-ல் அதைச் செலுத்தி முடித்துவிட்டேன். இதற்கு எனக்கு 6 ஆண்டுகள் ஆனது. ஹோம் லோன் எடுத்து வாங்குவோருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. நீங்கள் ஓவராக யோசிக்கும் நபராக இருந்தால்.. பதற்றம் ஏற்படும் என்றால் ஹோம் லோன் உங்களுக்கு செட் ஆகாது. ஹோம் லோன் கட்டும் போது நிச்சயம் மன அழுத்தம் இருக்கவே செய்யும்" என்றார்.
இவர் இப்போது ஜெர்மனியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 2019ல் அவர் அந்த வீட்டை வாங்கியுள்ளார். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்டு கடனைச் சீக்கிரம் அடைக்க முடிவு செய்துள்ளார். 2021ல் தான் இதற்கான பிளானை போட்டுள்ளார். வருமானத்தை அதிகரிக்க ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வெளிநாடு சென்றது கடனை விரைவாக அடைக்க உதவியதாக அவர் தெரிவித்தார். எனவே, லோன் இருந்தால் அதை வேகமாக அடைக்க வெளிநாடுகளுக்குச் செல்வதே சரியாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
ஹோம் லோன்+ வட்டி
ரூ.53 லட்சம் மதிப்பிலான வீட்டிற்கு இவர், மொத்தம் 67 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதில் 14 லட்சம் ரூபாய் வட்டியாகும். இது அதிகம் போலத் தெரிந்தாலும் மற்றவர்கள் செலுத்தும் ஹோம் லோனை விட இது மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும், "ஹோம் லோன் இருந்தால் எவ்வளவு தொகை கூடலாகக் கட்ட முடியுமோ.. அந்தளவுக்கு முன்கூட்டியே செலுத்துங்கள். இது வட்டியில் மிகப் பெரிய தொகையைச் சேமிக்கிறது.. நான் 6 ஆண்டுகளில் கடனை அடைத்தாலும், இறுதியில் ₹67 லட்சத்தை (₹53 லட்சம் அசல் + ₹14 லட்சம் வட்டி) மொத்தமாகச் செலுத்தினேன். அதாவது ₹14 லட்சம் அப்படியே வங்கிக்குப் போய் இருக்கிறது. நான் அவர்களைக் குறை கூறவில்லை. ஆனால் நமக்கு அது ஒரு பெரிய தொகை. எனவே, புத்திசாலித்தனமாகத் திட்டமிடுங்கள்.
சிக்கல்கள்
வீடு வாங்குவது முதலில் உணர்வுப்பூர்வமான விஷயமாகத் தோன்றும். ஆனால், பராமரிப்புச் சிக்கல்கள் குவியத் தொடங்கும்போது அந்த உணர்வு மறைந்துவிடும். வீட்டைச் சொந்தமாக்குவது அதன் பிரச்சினைகளையும் சொந்தமாக்குவது போன்றது.
பேப்பரில் பார்த்தால் எனது வீட்டின் மதிப்பு இப்போது ரூ.1 கோடியாகும். ஆனால் எனது வங்கி இருப்பு இப்போது கிட்டத்தட்ட ஜீரோவாகவே இருக்கிறது. அதேநேரம் வீடு வாங்குவதில் சில நன்மைகளும் இருக்கவே செய்கிறது. குடும்பம், உறவினர்கள், அண்டை வீட்டார் உங்களைப் பாராட்டுகிறார்கள். இது கடனை அடைக்க உதவாவிட்டாலும், மனதிற்கு ஒருவிதத் திருப்தியை அளிக்கும்.
நிதி ஒழுக்கம்
வாழ்க்கையில் எந்தவொரு மோடிவேஷனும் உத்வேகம் இல்லாமல் இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன் ஒரு உந்துசக்தியாகக் கூட அமையும். இது அவர்களை மேலும் கடுமையாக உழைக்கவும், நிதியைச் சிறப்பாக நிர்வகிக்கவும் வைக்கும் மேலும், ஒரு ஹோம் லோன் எடுத்தாலே உங்களுக்கு நிதி ஒழுக்கம் தானாகவே வந்துவிடும். இதனால் முன்பைவிட சிறப்பாக பட்ஜெட் போடுவது, சேமிப்பது மற்றும் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள். அவர் செய்தது சாதாரணமான ஒரு விஷயம் இல்லை என்று நெட்டிசன் ஒருவர் வாழ்த்து சொல்லியுள்ளார். மற்றொரு நபர், "ஹோம் லோனை முன்கூட்டியே செலுத்துவது மிகப் பெரிய நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் தரும்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications