கபில் சிபல் அஸ்திரம்.. டெல்லிக்கு லாக் வைத்த ப.சி.. காங் எம்பி சீட்டை தூக்கியது எப்படி? நடந்தது என்ன
டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழ்நாட்டில் இருந்து ராஜ்ய சபா தேர்தலுக்கு ப. சிதம்பரம் தேர்வாகி இருக்கிறார். பல கட்ட ஆலோசனைக்கு பிறகு ப. சிதம்பரத்தின் பெயரை காங்கிரஸ் தேசிய தலைமை டிக் அடித்துள்ளது. இதற்கு பின் என்ன நடந்தது? ப. சிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்ய சபா இடங்களில் 2 அதிமுக வசம் செல்கிறது. 4 திமுகவிற்கு செல்கிறது. இதில் திமுக 3 வேட்பாளர்களை அறிவித்த நிலையில்.. 1 ராஜ்ய சபா இடத்தை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக அளித்தது.
ஆனால் இந்த 1 இடத்திற்கு மியூசிக் சேரில் கடைசியில் இருக்கும் சீட்டிற்கு அடித்துக்கொள்வது போல பல மூத்த தலைகள் காங்கிரசில் அடித்துக்கொண்டனர்.

என்ன நடந்தது?
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், விஸ்வநாதன் , மாநில தலைவர் கே. எஸ் அழகிரி உள்ளிட்ட பலர் இந்த எம்பி பதவிக்கு காய் நகர்த்தினர். ஆனால் இவர்களுக்கு பதிலாக ப. சிதம்பரத்தை தேசிய தலைமை டிக் அடித்துள்ளது. இதனால் மற்ற சீனியர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். காங்கிரசில் தலைகள் அப்செட்டில் இருப்பதெல்லாம் புதிய கதை அல்ல.. இது ஒரு புறம் இருக்க அதே சமயம் டெல்லி வரை சென்று ப. சிதம்பரம் தனது எம்பி பதவியை உறுதி செய்தது எப்படி என்று பார்க்கலாம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் முதலில் ப. சிதம்பரம் வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்துதான் ராஜ்ய சபாவிற்கு செல்வார் என்று கூறப்பட்டது. இவர் தற்போது மகாராஷ்டிராவில் ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி உள்ளார். ஆனால் அவரின் பதவிக்காலம் முடிய உள்ளதால், மீண்டும் வேறு ஏதாவது வடமாநிலங்களில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வாக திட்டமிட்டு இருந்தாராம். ஹரியானா அல்லது மபியை ப. சி குறித்து வைத்து இருந்தாராம். ஆனால் மற்ற மாநிலங்களில் இருக்கும் இருக்கும் ராஜீவ் சுக்லா, அஜய் மக்கான் போன்ற பல தலைகள் தங்களுக்கும் எம்பி பதவி வேண்டும் என்று கூறி நெருக்கடி கொடுத்துள்ளனர்.

நெருக்கடி
தமிழ்நாடு தவிர்த்து காங்கிரஸ் பெற போகும் 9 ராஜ்ய சபா எம்பி பதவிக்கான இடங்களுக்கும் மற்ற மாநில காங்கிரஸ் தலைகள் பலர் முன்பே துண்டு போட்டு வைத்துவிட்டனராம். இதனால் மீதம் இருக்கும் தமிழ்நாடு எம்பி கோட்டாவைத்தான் ப. சிதம்பரத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மற்ற மூத்த தலைகள் இதே எம்பி சீட்டிற்கு போட்டி போட்ட நிலையில்தான் ப. சி நேரடியாக டெல்லிக்கே பறந்து சென்று தனது சீட்டை லாக் செய்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

டெல்லி
சில நாட்களுக்கு முன்புதான் ப. சிதம்பரம் திடீரென டெல்லிக்கு சென்றார். அங்கு சோனியா காந்தியையும் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு காரணம் எம்பி சீட்டை பெறுவதுதான் என்கிறார்கள். சமயம் பார்த்து அப்போதுதான் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இருந்தார். கபில் சிபல் காங்கிரசில் இருந்து வெளியேற கருத்து வேறுபாடு காரணம் என்றாலும், எம்பி சீட் கிடைக்காததும் முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த முறை உ.பியில் இருந்து கபில் சிபல் எம்பியாகி இருந்தார்.

மீண்டும் ஆக முடியாது
ஆனால் இப்போது உ.பியில் இருந்து மீண்டும் கபில் சிபல் காங்கிரஸ் உதவியுடன் எம்பியாக முடியாது என்பதால் அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி.. சமாஜ்வாதி உதவியுடன் சுயேட்சையாக எம்பியாக முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில்தான் ப. சிதம்பரமும் இப்படி ஏதாவது முடிவை எடுத்துவிட கூடாது.. எம்பி சீட் கிடைக்கவேயில்லை என்று காங்கிரசில் இருந்து வெளியேற கூடாது என்று டெல்லி காங்கிரஸ் தலைமை அஞ்சி இருக்கிறதாம். ப. சிக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை. அவர் காங்கிரசில் இருந்து இப்போதைக்கு வெளியேற வாய்ப்பே இல்லை என்றாலும், மூத்த தலைவருக்கு கண்டிப்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு இருக்கிறதாம்.

கட்டாயம்
வரிசையாக ஹர்திக் பட்டேல் தொடங்கி கபில் சிபல் வரை முக்கிய பல தலைவர்களை காங்கிரஸ் இழந்து வருகிறது. இப்போது ப. சிதம்பரம் போன்ற தலைவரையும் அப்செட் ஆக்க காங்கிரஸ் விரும்பவில்லையாம். இதனால்தான் தமிழ்நாட்டில் மற்ற காங்கிரஸ் தலைகள் சிலர் எம்பி பதவிக்கு முயன்றும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி ப. சியை டிக் அடித்து இருக்கிறார் என்கிறார்கள் கதர் வட்டாரத்தினர். அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாக இருக்குடா என்று வடிவேலு சொல்வது போல.. கபில் சிபல் எடுத்த முடிவு.. ப.சிக்கு சாதகமாக மாறி இருக்கிறதாம்!












Click it and Unblock the Notifications