சந்திரபாபு நாயுடுவின் அந்த ஒரு வார்த்தை.. சட்டென உயர்ந்த பங்குச்சந்தைகள்.. இதுல இவ்வளவு இருக்கா
டெல்லி: இந்தியப் பங்குச்சந்தைகள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பெரும் சரிவைச் சந்தித்த நிலையில், நேற்று முதல் அது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு தான்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலில் பாஜக எளிதாக வெல்லும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் கூறிய நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தது. இதனால் அப்போது பங்குச்சந்தை மிகப் பெரிய சரிவை எதிர்கொண்டது.

பங்குச்சந்தைகள்: தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி தொடக்கம் முதலே பங்குச்சந்தைகள் படுவேகமாக சரிந்தன. ஒரு கட்டத்தில் அது 6,234.35 புள்ளிகள் அதாவது 8.15% சரிந்து 70,234.43 புள்ளிகள் வரை கூட சரிந்தது. அதன் பிறகுச் சற்று அதிகரித்து சுமார் 71,800 புள்ளிகளைக் கடந்து அது தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிப்டியும் கூட 23,300இல் தொடங்கி 21,300 வரை சரிந்தது. அதன் பிறகு 21,800இல் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பங்குச்சந்தைகள் கடுமையாகச் சரிந்தது. இருப்பினும், நேற்றைய தினம் இந்தியா கூட்டணிக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை என்றும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததும் தெரிந்தவுடன் பங்குச்சந்தை மெல்ல அதிகரித்தது. அதிலும் குறிப்பாக மதியத்திற்குப் பிறகு பங்குச்சந்தைகள் கணிசமாகவே உயர்ந்தன. இதற்கு முக்கிய காரணமே சந்திரபாபு நாயுடு தான்.
சந்திரபாபு நாயுடு: நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 இடங்களில் சந்திரபாபு நாயுடு கட்சி 135 இடங்களில் வென்றது. அதேபோல அங்குள்ள லோக்சபா சீட்களை பொறுத்தவரை அங்கு மொத்தம் 25 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 21 தொகுதிகளில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி வென்றுள்ளது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் மட்டும் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. இது தவிர பாஜக 2 தொகுதிகளிலும் ஜனசேனா 3 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு ஆதரவு முக்கியமானது. அவர் என்டிஏ கூட்டணியில் இருந்து தேர்தலைச் சந்தித்த போதிலும் அவரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. குறிப்பாகக் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியதாகக் கூறப்பட்டது.
பங்குச்சந்தைகளில் எதிரொலி: இதனால் பங்குச்சந்தைகள் ஒரு வித குழப்பத்திலேயே இருந்தது. இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாகத் தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். அதாவது தான் பாஜக கூட்டணியிலேயே இருப்பதாகவும் அதன் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி செல்வதாகவும் கூறிவிட்டார். இதன் மூலம் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு பாஜகவுக்குத் தான் என்பது உறுதியானது. இதனால் பாஜக எளிதாக ஆட்சி அமைக்கும் சூழலும் ஏற்பட்டது.
உயர்வு: இது ஒருவித தெளிவை மார்கெட்டிற்கு கொடுத்தது. ஏனென்றால் எதாவது குழப்மப் நிலவினால் மார்கெட் எப்போதும் சரியும்.. அதன்படியே பாஜக மீண்டும் அமைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்ட போது மார்கெட் சரிந்தது. அதேநேரம் சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சு பாஜக ஆட்சி தொடரும் என்பதை உறுதி செய்ததால் மார்கெட் மீண்டும் அதிகரித்து.
இன்றைய தினமும் அது தொடரவே செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை எண் நிப்டி, மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் என இரண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications