பாஜகவுக்கு எவ்வளவு சீட்? டக்கென கேட்ட அமித் ஷா.. எடப்பாடி சொன்ன பதிலால் அதிர்ச்சி.. ஆஹா.. அப்படியா?
டெல்லி : அமித் ஷா, நட்டா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனது அணியினரோடு சென்று சந்தித்து 2024 தேர்தல் தொடர்பாக ஆலோசித்த நிலையில், டக்கென அமித் ஷா, பாஜகவுக்கு எவ்வளவு சீட் ஒதுக்குவீர்கள் எனக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் தான் பாஜகவின் டாப் தலைகளை அதிரச் செய்துள்ளது.
டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்துப் பேசினார்.

அப்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியோடு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அதிமுக பாஜக கூட்டணி விவகாரம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமிக்கு இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவியது. அண்ணாமலையின் கூட்டணி தொடர்பான பேச்சின் காரணமாக கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், கூட்டணி தொடர்பாக அண்ணாமலையோடு பேச வேண்டிய தேவையில்லை, பாஜக டெல்லி தலைமையுடன் தான் பேசுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வந்ததால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவுடன் பேசி கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போது இரு தரப்பிலும் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசப்பட்டது.
அமித் ஷா உடன் ஆலோசனை : அதிமுக மற்றும் பாஜக பிரிந்து நின்றால் சிக்கல் ஏற்படும், எனவே வரும் நாட்களில் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுகவினர் டெல்லி தலைமையை தான் பாஸ் எனக்கூறி வரும் நிலையில் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி முன்பே அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அமித் ஷா அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும், இந்தச் சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதை முன்கூட்டியே கூற வேண்டும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொகுதி பங்கீட்டு குழப்பங்கள் ஏற்பட்டது போல இந்த முறை நடக்கக்கூடாது என அமித் ஷா எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
டக்கென கேட்ட அமித் ஷா : கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என அமித் ஷா கூறியதாகவும், பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் ஐடியா இருக்கிறது என அமித் ஷா நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அமித் ஷா திடீரென ஓப்பனாக சீட் எவ்வளவு கொடுப்பீர்கள் எனக் கேட்டதால் அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் சுதாரித்துக்கொண்டு, அதிமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கூட்டணி அமைக்க இருப்பதாகவும், திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளையும் நம் பக்கம் கொண்டு வருவோம், எனவே தற்போதே எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் எனக் கூற முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சமாளித்த எடப்பாடி : அமித் ஷாவின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, பிடி கொடுக்காமல் சமாளிக்கும் வகையில் பதில் அளித்ததை அமித் ஷா, நட்டா, அண்ணாமலை மூவரும் உன்னிப்பாக கவனித்துள்ளனர். தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போலவே காட்டிக்கொண்டாலும் எடப்பாடி நம்பரை சொல்லாமல் தவிர்த்தது பாஜக தலைமைக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை 25 இடங்களில் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார். தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக தரப்போ, கூட்டணி பெரிதாவதை காரணம் காட்டி 5 தொகுதிகளோடு நிறுத்த முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அமித் ஷா முன்னிலையில் ஈபிஎஸ் சொன்ன பதில் பாஜக தலைமைக்கு யோசனையை ஏற்படுத்தியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications