அதிக நன்கொடை பெற்ற கட்சிகள்.. பாஜக முதலிடம்.. காங்கிரஸை முந்திய "இந்த" மாநில கட்சி! திமுக எங்கே?
டெல்லி: இந்த காலத்தில் கட்சியை நடத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.. ஒவ்வொரு தேர்தலுக்கும் முக்கிய கட்சிகள் பல நூறு கோடியைச் செலவழிக்க வேண்டிய சூழலே இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நன்கொடைகளையே நம்பி உள்ளன. இதற்கிடையே எந்த அரசியல் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன என்பது குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை என்பது ரொம்பவே முக்கியம். பொதுமக்கள், தொழிலதிபர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் தான் இப்போது கட்சியை நடத்த முக்கியமாக உதவுகிறது இருக்கிறது.

நன்கொடை விவரங்கள்:
இதற்கிடையே எந்த கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கு மேல் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது தொண்டு நிறுவனத்தில் இருந்தும் நன்கொடை பெற்றால் அது குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக பாஜக 2244 கோடி ரூபாய் நன்கொடை பெற்று இருக்கிறது. இது கடந்த 2022- 23 நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். மறுபுறம் காங்கிரஸ் கட்சி இதே காலகட்டத்தில் 288.9 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதுவும் அதற்கு முந்தைய ஆண்டு காங்கிரஸ் பெற்ற 79.9 கோடி ரூபாயைக் காட்டிலும் கிட்டதட்ட 3 மடங்கு அதிகமாகும்.
பாஜக:
இதில் அதிகபட்ச நன்கொடை ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டிடமிருந்து தான் வந்துள்ளது. பாஜகவுக்கு இந்த டிரஸ்ட் ரூ.723.6 கோடி நன்கொடைகளைக் கொடுத்துள்ளது. மறுபுறம் காங்கிரஸுக்கு இது ரூ.156.4 கோடி நன்கொடை கொடுத்துள்ளது.
அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் 2023-24 நிதியாண்டில் பாஜகவுக்கு வந்த நன்கொடையில் மூன்றில் ஒரு பங்கும் காங்கிரஸுக்கு வந்த நன்கொடையில் சரிபாதிக்கு மேலும் இந்த ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டிலிருந்தே வந்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் ப்ரூடென்ட் டிரஸ்டிற்கு மேகா எங் & இன்ஃப்ரா லிமிடெட், சீரம் இன்ஸ்டிட்யூட், ஆர்செலர் மிட்டல் குழுமம் & ஏர்டெல் ஆகியவை அதிக நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திரங்கள்:
அதேநேரம் இந்த விவரங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நன்கொடை விவரங்கள் சேர்க்கப்படாது. ஏனென்றால் அரசியல் கட்சிகள் தங்கள் வருடாந்திர தணிக்கையில் மட்டும் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட்டால் போதும். அதேநேரம் கடந்த பிப். மாதம் உச்ச நீதிமன்றம் இந்த தேர்தல் பத்திர முறையை ரத்து செய்ததால், இப்போது அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாகவோ பெறப்படும் நிதிகளிலேயே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
திமுக:
அதேநேரம் சில பிராந்திய கட்சிகளும் 2023-24 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாகத் தெலுங்கானாவில் கடந்தாண்டு வரை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் ரூ.495.5 கோடி நன்கொடை பெற்று இருக்கிறது. அதேபோல முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.121.5 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. திமுக ரூ.60 கோடி நன்கொடையாகப் பெற்று இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர 2023-24ல் பிஆர்எஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் முறையே ரூ.85 கோடி மற்றும் ரூ.62.5 கோடியை ப்ரூடென்ட் டிரஸ்ட் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேலும், ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் ப்ரூடென்ட் டிரஸ்ட் மூலம் ரூ.33 கோடி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக ட்ரையம்ப் எலெக்டோரல் டிரஸ்ட் மற்றும் ஜெயபாரத் டிரஸ்ட் மூலம் ரூ.8 கோடி பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications