மழைக்காலம் வேற.. ஜலதோஷத்திற்கும் கொரோனா அறிகுறிகளுக்கும் வித்தியாசம் என்ன.. எளிய விளக்கம் இதோ
டெல்லி: சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து உலகெங்கும் மீண்டும் கொரோனா அச்சம் அதிகரித்துவிட்டது. கொரோனாவுக்கும் வழக்கமாக ஏற்படும் சளிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம்.
சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. தினசரி பல லட்சம் பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு அமலில் இருந்த ஜீரோ கோவிட் பாலிசி விலக்கிக் கொள்ளப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
அங்கு மருத்துவமனைகள் முழுக்க நிரம்பி வருகிறது. கொரோனா பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருவதால் எங்கு இது புதிய உருமாறிய கொரோனா வகைகள் பரவ காரணமாக அமையுமோ என்றும் அஞ்சப்படுகிறது.

சீனா
இதனால் எங்கு உலகில் மற்றொரு அலை ஏற்படுமோ என்றும் அஞ்சப்படுகிறது. சீனா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நல்வாய்ப்பாக இந்தியாவில் இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு இன்னுமே மிகக் குறைவாகவே உள்ளது. இருந்த போதிலும், மத்திய அரசு தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
மேலும், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருவோருக்கு மீண்டும் விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும், குறிப்பாக வயதானவர்கள் பூஸ்டர் டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டமான இடங்களைத் தவிர்க்கும்படியும் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜலதோஷம்
இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகள் என்று அனைவருக்கும் தெரியும். அதேநேரம் வழக்கமான சளி மற்றும் காய்ச்சலுக்கும் இதே அறிகுறிகள் தான் ஏற்படும். தமிழகத்தில் இப்போது மழைக் காலம் நிலவும் நிலையில், சளி & காய்ச்சல் அதிகம் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், வழக்கமான சளி, இருமல் மற்றும் கொரோனா ஆகியவற்றுக்கு இடையே வேறுபாட்டைக் கண்டறிவது கடினமாகும். கொரோனா வைரஸ் மற்றும் சாதாரண சளி எனப்படும் ஜலதோஷம் இரண்டுமே வைரஸ்களால் ஏற்படுகின்றன.

வேறுபாடு
SARS-CoV-2 வைரசால் கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலையில், ரைனோவைரஸால் ஜலதோஷம் ஏற்படுகிறது. இரண்டு வைரஸ்களும் ஒரே மாதிரியான வழிகளில் பரவுகின்றன.. எனவே, அறிகுறிகளும் சற்று ஒரே மாதிரி இருக்கும். இருப்பினும், சில விஷயங்களை வைத்து நாம் வேறுபாடுகளைக் கண்டறியலாம். கொரோனா வைரஸ் நம்மைப் பாதித்து 2-14 நாட்களில் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அதேநேரம் ஜலதோஷத்தின் அறிகுறிகள் வைரஸ் பாதித்த 1- 3 நாட்களில் தெரியத் தொடங்கும். வழக்கமான ஜலதோஷத்திற்குத் தனியாகச் சிகிச்சை இல்லை.. பொதுவாக 3 முதல் 10 நாட்களில் இதிலிருந்து குணமடைவார்கள். கொரோனாவை போல இல்லாமல் சளி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

அறிகுறிகள்
இரண்டிற்கும் இடையே அறிகுறிகளில் உள்ள முக்கிய வேறுபாடுகளைப் பார்க்கலாம். தலைவலி, இருமல், தசை வலி, சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். அதேநேரம் சாதாரண சளி ஏற்படும்போது தசை வலி, சோர்வு பெரும்பாலும் இருக்காது.. தலைவலி கூட சிலருக்குத் தான் இருக்கும். அதேபோல ஜலதோஷம் ஏற்படும் போது தும்மல் வழக்கமாக ஏற்படும். ஆனால், கொரோனாவில் இது இருக்காது. மூக்கு ஒழுகுதல் மற்றும் காய்ச்சல் இரண்டிற்குமே இருக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே ஏற்படும். ஜலதோஷம் ஏற்பட்டால் இருக்காது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொது இடங்களுக்குச் செல்லும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.. சோப்பு அல்லது சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்துங்கள்.. திருமணம், அரசியல் நிகழ்வுகள் போன்ற அதிக கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்க்கவும்.. தேவையில்லாத சர்வதேச பயணங்களைத் தவிர்க்கவும்.. காய்ச்சல், தொண்டை வலி, இருமல், தளர்வான அசைவுகள் போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.. கடைசியில் சீக்கிரம் பூஸ்டர் டோஸ் எடுக்கவும்.












Click it and Unblock the Notifications