‛‛தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம்’’.. தமிழகத்தில் போட்டியிடாதது ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திராவில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கினாலும் செலவுக்கு பணம் இல்லாததால் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் நிர்மலா சீதாராமன் பிறந்த தமிழ்நாடு அல்லது கணவரின் மாநிலமான ஆந்திராவில் களமிறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது வரை பாஜக 7 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நிர்மலா சீதாராமனின் பெயர் என்பது இடம்பெறவில்லை. மேலும் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவதாக கூறப்பட்ட திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சந்திரசேகர், பெங்களூர் வடக்கில் மத்திய அமைச்சர் ேஷாபா கரந்தலாஜே, பெங்களூர் மத்திய தொகுதியில் சிட்டிங் பாஜக எம்பி பிசி மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இதனால் லோக்சபா தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவாரா? என்பதில் சந்தேகம் கிளம்பியது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் போட்டி தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் லோக்சபா தேர்தல் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில் வருமாறு:
‛‛பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க விரும்பினார். இதுதொடர்பாக என்னிடம் தெரிவித்தபோது ஒருவாரம் அல்லது 10 நாளில் யோசித்து முடிவு சொல்வதாக புறப்பட்டு சென்றேன். அதன்பிறகு யோசித்து பார்த்துவிட்டு தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினேன். தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என தெரிவித்தேன்.
அதோடு போட்டியிடும் இடம் ஆந்திராவா? தமிழ்நாடா? என்ற பிரச்சனை எனக்கு இருந்தது. ஏனெ்னறால் அங்கு வெற்றிபெற ஒவ்வொரு வகையான அளவுகோல்கள் உள்ளன. நீங்கள் இந்த ஜாதியை சேர்ந்தவரா? அந்த மதத்தை சேர்ந்தவரா? நீங்கள் இதுவா? என்ற கேள்விகள் பிரதானமாக உள்ளன. இதற்கானவள் நான் இல்லை. இதுபோன்ற விஷயங்களை என்னால் செய்ய முடியாது என்று கூறினேன். நான் கூறிய பதிலை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனால் நான் போட்டியிடவில்லை'' என்றார்.
இந்த சமயத்தில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று கூறுகிறீர்களே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், ‛‛நான் கையாளும் நிதி இந்தியாவுக்கானது. அது எனக்கானது இல்லை. என்னுடைய சம்பளம், வருமானம், சேமிப்பு மட்டுமே எனக்கானது. மற்றவை எல்லாம் இந்தியாவுக்கான நிதி'' எனக்கூறினார்.












Click it and Unblock the Notifications