இது அருவருப்பானது.. நீதி வெல்லும்.. மல்யுத்த வீராங்கணைகள் கைதால் கொதித்த உதயநிதி.. கடும் சாடல்!
டெல்லி: பாலியல் தொல்லை விவகாரத்தில் டெல்லியில் நீதி கேட்டு இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீராங்கணைகளை டெல்லி போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் செயல்பட்டார். பாஜக எம்பியான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லியில் பேராட்டம் நடத்தினர்.

இதையடுத்து விசாரணை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மேரிகோம் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்தாலும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கடந்த மாதம் முதல் வெயில், மழை என பாராமல் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதால் நீதி கேட்டு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீராங்கணைகளை தரதரவென இழுத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பல அரசியல் கட்சிகள் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்ற பெண் மல்யுத்த வீரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய டெல்லி காவல்துறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நமது சாம்பியன்களுக்கு இப்படி நடத்தியது அருவருப்பானது. அதோடு நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நீதி வெல்லும்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின், ‛‛பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லி பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?" என கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications