பாஜகவில் பிரசாந்த் கிஷோர்.. கிளம்பிய தகவல்களுக்கு அவரே கொடுத்த பதில் என்ன தெரியுமா?
டெல்லி: 'ஐபேக்' நிறுவனத்தை நடத்தி வரும் அரசியல் ஆலோசகர், வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் நிபுணத்துவம் மூலம் முக்கிய அரசியல் கட்சிகளை ஆட்சியில் அமர முக்கிய பங்கு வகித்துள்ளார்.
தேர்தல் வெற்றிகளைத் தேடித் தரும் வியூகங்களை, செயல்திட்டங்களைச் செயல்படுத்துதில் கைதேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர காரணமாக இருந்தது முதல் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்கள் வரை பல கட்சிக்களுக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார் பிரசாந்த் கிஷோர். சமீபத்தில் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் ஆட்சியில் அமர இவரது பங்கும் முக்கிய காரணமாகும்.

அடிக்கடி கருத்துக்கள்
சமீப காலங்களில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் அடிக்கடி கருத்துக்களை கூறி வந்தார். ''கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. மோடி எழுச்சி பெற்று மத்தியில் ஆட்சியில் பிடித்து 7 வருடங்கள் தாண்டி விட்ட நிலையிலும், மோடியை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் வலுவாக இல்லை'' என்று அண்மையில் அவர் காங்கிரசை தாக்கி இருந்தார்.

'பாஜகவில் சேரமாட்டேன்'
இதனால் பிரசாந்த் கிஷோர் பாஜகவில் சேர போகிறாரா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பட்டு வந்தது. இந்த நிலையில் நான் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், '' நான் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டேன். கருத்தியல் ரீதியாக, நான் பாஜகவில் சேருவது மிகவும் சங்கடமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

தோல்வியுற்ற அரசியல்வாதி
தேர்தல் மற்றும் அதற்கு அப்பால் பணியாற்றத் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளிடம் நான் ஒரு அரசியல் உதவியாளராக என்னைப் பார்க்கிறேன் என்றும் அரசியல் வியூக நிபுணராக பார்ப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து பின்னர் வெளியேறிய பிரசாந்த் கிஷோர் அது குறித்து கூறுகையில் நிதிஷ் குமாருடன் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதன் காரணமாக விலக நேரிட்டது. அந்த வகையில் நான் ஒரு "தோல்வியுற்ற அரசியல்வாதி" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications