எக்சிட் போல் எல்லாம் தவறு.. மோடி 3வது முறை பிரதமர் ஆனால் மொட்டை அடிப்பேன்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ சபதம்
டெல்லி: 7 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் நேற்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் 350 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூரியுள்ளன. இந்த நிலையில் எக்சிட் போல் எல்லாம் தவறு, மோடி 3வது முறையாக பிரதமர் ஆனால் நான் மொட்டை அடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக 350 மேல் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றே வந்துள்ளன. இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எனினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி, பாஜக இந்தமுறை ஆட்சி அமைக்காது என்றும் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் எனது தலையை நான் மொட்டை அடித்துக்கொள்வேன் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் சோம்நாத் பாரதி கூறியிருப்பதாவது:- மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் நான் எனது தலையை மொட்டை அடித்துக்கொள்வேன். எனது வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. 4 ஆம் தேதி அனைத்து எக்சிட் போல்களும் தவறானவை என்று நிரூபிக்கப்படும். பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக மாட்டார். டெல்லியில் 7 சீட்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புது டெல்லி லோக்சபா தொகுதியில் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ்ஜை எதிர்த்து சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார்.
சோம்நாத் பாரதி மேலும் தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், "எக்சிட் போலில் தோல்வி என காட்ட மோடியின் தோல்வி அனுமதிக்கவில்லை. எனவே உண்மையான தேர்தல் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். பாஜகவிற்கு எதிராக மக்கள் வலுவாக வாக்குகளை செலுத்தியிருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
டெல்லியில் மொத்தம் உள்ள தொகுதிகளில் பாஜக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கடந்த 2019 தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது. எனினும் இந்த தேர்தலில் டெல்லியில் அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று சோம்நாத் பார்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications