ஆக்சிஜன் சப்ளையை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம்- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொடர்பான வழக்குகளை அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி பெஞ்ச் விசாரித்தது. அப்போது பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன்வாங்கியோ நோயாளிகளுக்கு ஆக்சிஜனை தர வேண்டியது மத்திய அரசின் கடமை என காட்டமாக சொன்னது ஹைகோர்ட்.

டெல்லி உயர்நீதிமன்றம்
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் இருக்கும் கொரோனா வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி போப்டே கூறினார். ஆனாலும் டெல்லி உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

45 நோயாளிகள் மரணம்
டெல்லியில் 2 நாட்களில் மட்டும் 45 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஆக்சிஜன் சப்ளையை சீராக வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி பெஞ்ச் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்தது.

டெல்லி மருத்துவ கட்டமைப்பு உருக்குலையும்
இந்த விசாரணையின் போது டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேஹ்ரா, டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கட்டாயம் தேவை. அது கிடைக்காமல் போனால் அடுத்த 24 மணிநேரத்தில் டெல்லியில் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பை உருக்குலைந்துவிடும். நோயாளிகள் நிலைமை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கும் என சுட்டிக்காட்டினார்.

தூக்கிலிட தயார்
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், எப்போது டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக மடிவதை யாரும் பார்க்கவும் முடியாது. ஆக்சிஜன் சப்ளையை தடுப்பதாக ஒரு சம்பவத்தை எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications