"இதை எப்படி அனுமதிக்கலாம்.. இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பணும்!" சுப்பிரமணிய சுவாமி பரபர
டெல்லி: பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இலங்கை விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்குக் கடந்த ஆண்டு இறுதி முதலே பொருளாதார நெருக்கடி ஏற்படத் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த நெருக்கடி மோசமடைந்தது. இயற்கை விவசாயம் தொடங்கி கொரோனா வரை அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இலங்கை
முதலில் பொறுத்துப் பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் போராட்டத்தில் குதித்தனர். அமைதியாக நடைபெற்று வந்த மக்கள் போராட்டம் ஒரு கட்டத்தில் கையை மீறிச் செல்லும் சூழல் உருவானது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அங்கு மக்கள் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்தது. இதையடுத்து வேறு வழியின்றி மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே அங்கு புதிய பிரதமர் ஆனார்,

உதவவில்லை
இருப்பினும், அதன் பின்னரும் கூட அங்கு நிலைமை மேம்படவில்லை. இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த ரணில் விக்கிரமசிங்கே எடுத்த முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. வெளிநாடுகள் இலங்கைக்கு உதவத் தயங்குவதாகக் கூறப்பட்டது. இந்தியா மட்டுமே எரிபொருள் தொடங்கி பல்வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவி வந்தது. இதை ரணில் விக்கிரமசிங்கேவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார்.

போராட்டம் தீவிரம்
இதனிடையே கடந்த சில நாட்களாக அங்கு மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்களை அதைக் கைப்பற்றவும் செய்தனர். இருப்பினும் அதற்கு முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ச தப்பிவிட்டார்.

சுப்பிரமணியன் சுவாமி
கோட்டாபய ராஜபக்ச கப்பல் மூலம் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அவர் எங்கே உள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இலங்கை விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது ராஜபக்ச கேட்டுக்கொண்டால் இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவம்
இது தொடர்பாகச் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சுதந்திரமான தேர்தல் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டவர்கள். இத்தகைய சட்டப்பூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்க முடியும்? இதை அனுமதித்தால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. ராஜபக்ச இந்திய ராணுவத்தின் உதவியைக் கேட்டுக் கொண்டால் நாம் கொடுத்து உதவ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications