நவீன அலோபதி முட்டாள்தனமானது.. பாபா ராம்தேவ் கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!
டெல்லி: நவீன மருத்துவ முறையை முட்டாள்தனமானது என்று கூறிய பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ், ''நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. அலோபதி மருந்துகளை உட்கொண்டு பலர் உயிரிழந்து விட்டனர். ரெமிடிசிவர் என இந்திய மருந்து கட்டுப்பாடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் ஒன்று கூட வேலை செய்யவில்லை' என்று பகீர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் பாபா ராமதேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மருந்துவார்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது, தோல்வியடைந்தது என பாபா ராம்தேவ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். பாபா ராம்தேவின் கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.
பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று நவீன மருத்துவ வசதிகளை கலைத்துவிட வேண்டும், அல்லது அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாபா ராம்தேவ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிடில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications