அரசு அதிகாரிகளுக்கு அதிர வைக்கும் அறிவிப்பு வரலாம்.. நாடாளுமன்ற நிலைக்குழு சொன்னதை கவனித்தீர்களா?
டெல்லி: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் பல ஊழியர்கள் ஒரு துறையில் அல்லது ஒரே போஸ்டிங்கில் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள்.. அதுவும் உயர் அதிகாரிகள் ஒரே துறையில் பணியாற்றுவது இப்போது வரை தொடர்கிறது. இப்படி அதிகாரிகள் நீண்ட காலம் பணியில் இருப்பது ஊழலை வளர்ப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கிறது. அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முக்கியமான பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
மத்திய அரசு பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது 145-வது அறிக்கையை நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருந்தது. நாடாளுமன்றத்தில் அண்மையில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது தான் இது தொடர்பாக இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தது..

நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்திருந்த அறிக்கையில் முக்கியமான சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தது. அதன்படி அதிகாரிகள் நீண்ட காலம் பணியில் இருப்பது ஊழலை வளர்க்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் எந்தவொரு அமைச்சகத்திலும் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பைத் தாண்டி, தங்காமல் இருப்பதை உறுதி செய்ய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.
மத்திய அரசு பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "அனைத்து அதிகாரிகளுக்கும் சுழற்சி கொள்கையாக இருக்கிறது. ஆனால் இது தற்போது வரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.. குறிப்பாக பொருளாதார மற்றும் உணர்திறன் மிக்க அமைச்சகங்களில் 8-9 ஆண்டுகளுக்கும் மேலாக சாதகமான அமைச்சகங்கள் அல்லது இடங்களில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். அமைச்சகங்களின் தலைவர்கள் 4 முதல் 5 முறை மாற்றப்பட்ட போதிலும், அதிகாரிகள் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள். இந்தப் போக்கை நிச்சயம் மதிப்பிட வேண்டும்.
அதிகாரிகள் தங்களுடைய பணிகாலம் முழுவதும் ஒரே அமைச்சகத்தில் இருக்கும் வகையில் தங்கள் பணியிடங்களை மாற்றியமைத்த சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே அத்தகைய இடைவெளியை எந்த தாமதமும் இல்லாமல் அரசு சரிசெய்ய வேண்டும்.
குறிப்பிட்ட பணியிடங்களில் அதிகாரிகள் நீண்ட காலம் தங்குவது ஊழலை வளர்த்துவிடுகிறது. இதை சரிசெய்ய உடனடியாக மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆகவே அனைத்து இடமாற்றங்களும் கொள்கைப்படி உடனடியாக செய்யப்பட வேண்டும். எந்தவொரு அமைச்சகத்திலும் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பைத் தாண்டி எந்த அதிகாரியும் தங்கக்கூடாது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications