இனி விமானங்களில் ‛பவர் பேங்க்' பயன்படுத்த தடை.. விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி.. பின்னணி
டெல்லி: இனி விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்தி செல்போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது.

நம் நாட்டில் விமான பயணங்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகளை டிஜிசிஏ எனும் பொது விமான போக்குவரத்து இயக்குநரகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமானங்களில் பவர்பேங்க் பயன்படுத்தி செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்ய தடை போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விமானத்தில் பவர் பேங்க் கொண்டு சென்றால் அதனை எப்படி வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம். ஆனால் விமானத்திற்குள் அதை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை. லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க கூடாது. கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிசிஏ எனும் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவிவில், ‛‛விமான பயணங்களை பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விமான பயணங்களின்போது பவர் பேங்க் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பவர் பேங்க்கில் லித்தியம் பேட்டரி உள்ளது. இதனால் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்படைந்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் நக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரி தீ விபத்துகள் அதீத ஆற்றல் கொண்டவை, சுயமாகத் தொடர்ந்து எரியக்கூடியவை என்பதால் கட்டுப்படுத்துவது கடினம். இவை தீப்பற்ற வைக்கும் மூலங்களாகச் செயல்பட்டு, விமானத்திற்குள் தீ விபத்துகளைத் தூண்டக்கூடும். மேலும், மறைவான இடங்களில் சேமிக்கப்படுவதால், தீ கண்டறிதல் மற்றும் பதிலளிப்பு தாமதமாகி, விமானப் பாதுகாப்பிற்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
பவர் பேங்கை தவறாக கையாளும்போது அதில் இருந்து தீவிபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். லித்தியம் பேட்டரி தொடர்பான தீ விபத்துகள் அதி தீவிரமானவை. அவை பிற மின்னணு சாதனங்ககளையம் வெடிக்க செய்யும். பிற தீ விபத்துகளை ஒப்பிடும்போது இது முற்றிலும் வேறுபட்டது. தொடர்ந்து எரியும் தன்மை கொண்டது. இதனால் தீவிபத்தை சமாளிக்க சிறப்பு வழிமுறைகள் அவசியம்
இதனால் பயணிகள் கொண்டு செல்லும் லித்தியம் பேட்டரி தொடர்பான பாதுகாப்பு அபாய மதிப்பீடுகளை விமான நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். விமானக் கேபின்களில் பேட்டரி தொடர்பான தீ விபத்துகளைத் தடுக்கவும், ஒரு சம்பவம் நடந்தால் விரைவாகக் கண்டறிந்து, திறம்பட தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த புதிய அறிவிப்பு குறித்து விமானங்களில் பயணிகளிடம் தெரிவிக்க வேண்டும். விமானங்கள் புறப்படுவதற்கு முன்பாக பவர் பேங்கை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications