ஒருநாள் ரெஸ்ட் விட்டு.. மீண்டும் மிரட்டும் கொரோனா .. 2 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 1,94,720 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 11.05 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் இறப்பு எண்ணிக்கையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 11.05 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட 4,868 பேரும் அடங்குவர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 442 இறப்புகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று 6.4 சதவீதமாக இருந்த நிலையில், இன்று 11.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 8.85 சதவீதமாக உள்ள நிலையில், நாட்டில் 1.64 லட்சம் கொரோனா பாதிப்புகள் செவ்வாய்கிழமை பதிவாகியுள்ளன. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9,55,319 ஆக உள்ள நிலையில், இது பாதிப்பு எண்ணிக்கையில் 2.65% சதவீதமாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 4,84,655ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி விகிதம்
கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 536 ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 96 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை 153 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு 4868 அதிகரித்துள்ளது அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1280 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும் ஓமிக்ரான் மாறுபாட்டு வகை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 407 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 805 பேர் குணமடைந்த நிலையில் 3 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications