20 ஆண்டில் 12 மடங்கு.. வருமான வரி விலக்கை அள்ளி தந்தது யார்? பாஜக ஆட்சியில் உயர்த்தப்பட்டது எவ்வளவு?
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையில் இருப்போர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில், வருமான வரி உச்சவரம்பு 12 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இன்று காலை 11 மணிக்கு அவர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.
மத்திய பட்ஜெட்:
குறிப்பாக இந்த மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். வருமான வரியில் புதிய முறையில் இருப்போருக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதை ரூ.12 லட்சமாக உயர்த்தி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
வருமான வரி விலக்கு:
இது தொடர்பான நிர்மலா சீதாராமன் பேசுகையில், "புதிய முறையில் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ரூ.80,000 வரை வரி பலன் கிடைக்கும். ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை" என்று அறிவித்தார். மேலும், புதிய வரி முறையில் இருப்போருக்கு நிலையான விலக்காக ரூ.75,000 கிடைக்கும். இதையும் சேர்த்தால் மாத சம்பளதாரர்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ.12.75 லட்சமாக உயர்கிறது.
நமது நாட்டை பொறுத்தவரை வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுவது இது முதல்முறை இல்லை.. கடந்த 20 ஆண்டுகளில் உச்சவரம்பு 12 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2005இல் இது ஒரு லட்சமாக இருந்த நிலையில், இப்போது அது ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2005க்கு பிறகு வருமான வரி விலக்கு இடையில் நான்கு முறை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி விலக்கு:
2005: வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது
2012: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது
2015: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது
2019: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டது.
2023: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.
2025: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது.
புதிய முறை:
புதிய வரி முறை 2025-26ல் அமலுக்கு வரும் சூழலில், அதில் 12 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்களின் வருமானத்தில் ரூ.4 லட்சம் வரை வருமானத்துக்குப் பூஜ்ய வரி விதிக்கப்படும்.. ரூ. 4 முதல் 8 லட்ச வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி, 8-12 லட்ச ரூபாய் வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும், 12-16 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.16 முதல் 20 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.20-24 லட்சத்தில் 25 சதவீதம், ரூ.24 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications