தலைநகர் டெல்லியில் தொடங்கிய "இந்தியா" கூட்டணி ஆலோசனை கூட்டம்.. யாரெல்லாம் மிஸ்ஸிங்!
டெல்லி: லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டம் இன்று நடைபெறும் நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே நாடு முழுக்க லோக்சபா தேர்தல் பிரச்சாரமே தீவிரமாக நடந்து வந்தது. தமிழ்நாட்டிற்கு முதலாம் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

அதன் பிறகு பல கட்டங்களில் நாடு முழுக்க உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தேர்தல் வரிசையாக நடைபெற்றது. இந்தச் சூழலில் இன்று ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட லோக்சபா தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணி: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை 400+ சீட்களில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கப் போவது உறுதி என்று பாஜக சொல்லி வருகிறது. அதேநேரம் மறுபுறம் மக்கள் பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் இதனால் இந்தியா கூட்டணியே வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்று கடைசிக் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இப்போது இந்தக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்கு எண்ணிக்கை, தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டம்: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,ஆம் ஆத்மி,சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் நாளை நிறைவடையும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டுள்ளார்.
தேர்தல் காரணமாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இதில் கலந்து கொள்வது சந்தேகம் என கூறப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அகிலேஷ் யாதவ் திட்டமிட்டபடி இதில் கலந்து கொண்டார். மேலும், ராகுல் காந்தி, சரத் பவார், கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லியில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை: இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் நேற்று திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்குப் பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தக் கூட்டத்தில் டி ஆர் பாலு கலந்து கொண்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
மிஸ்ஸிங்: இந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அக்கட்சியில் அருந்து பிரதிநிதி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல சிவசேனாவின் தாக்ரே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரும் கடைசி நேரத்தில் பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications