ராகுல் காந்தி ஜாதி எது? பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேச்சை பாராட்டிய மோடிக்கு கனிமொழி கண்டனம்!
டெல்லி: தம்முடைய சொந்த ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக லோக்சபாவில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் விமர்சித்திருந்தார். அனுராத் தாக்கூரின் இந்தப் பேச்சை பாராட்டி தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதங்களின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு ஏன் இடம்பெறவில்லை என்றார். பட்ஜெட் அல்வா தயாரிப்பில் கூட ஓபிசி பிரதிநிதிகள் அதிகம் இல்லை என்றார்.

இதற்கு பதிலளித்து அனுராக் தாக்கூர் நேற்று பேசுகையில், தம்முடைய ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகின்றனர். இதே லோக்சபாவில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மிகக் கடுமையாக எதிர்த்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்திக் கொள்ளுங்கள்.. ஆனால் இதே நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்றார். இதற்கு பதில் தந்த அனுராக் தாக்கூர், நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு ஜாதி தெரியாதவர் என சொல்லவில்லை என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் நலனுக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை அவமரியாதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த அவதூறுகளை எல்லாம் மகிழ்சியாகவே நான் ஏற்றுக் கொள்கிறேன். அனுராக் தாக்கூர் என்னை அவமதித்தார்; இழிவுபடுத்தினார். அதற்காக நான் அவரை மன்னிப்பு கேட்க சொல்லவில்லை என்றார்.
இதனிடையே அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தமது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், நேற்று நாடாளுமன்றத்தில் “தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?” என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார்.
அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார். நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில்
பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, அனுராக் தாக்கூர் போன்ற மூத்த தலைவர்கள் இப்படி பேசுவது எதிர்பாராதது. ஜாதி குறித்து இப்படி பேசுவதால் இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை உள்ளது. இதை பிரதமர் மோடியும் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வருத்தம் தருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications