கார்கே வீட்டில் திரண்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள்.. 18ஆம் தேதி குறித்த பாஜகவுக்கு எதிராக வியூகம்!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு, 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் டி.ஆர்.பாலு, வைகோ, திருமாவளவன், சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றி சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதா செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்க உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற அவைத்தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் டிஆர் பாலு, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரையன், ராகவ் சத்தா, நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்று, ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் நடைபெற்றது. மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் மாநிலங்களில் சீட்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகள் குறித்து ஊர்வலங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் அடுத்தடுத்த கூட்டங்களில் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இப்படியான சூழலில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை முன்வைத்து இன்று 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications