எல்லை பிரச்சனைக்கு தீர்வு? ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் முக்கிய மீட்டிங்.. கசிந்த தகவல்
டெல்லி: எதிரும், புதிருமாக இருந்த சீனாவையும், நம் நாட்டையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒன்று சேர்த்துள்ளார். இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி சீனா செல்லும் நிலையில் இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி டெல்லி வந்தார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் எல்லையில் அமைதியை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வருகிறதா?என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த கச்சா எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. இது நம் நாட்டுக்கு சாதகமாக உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்பால் பொறுத்து கொள்ளமுடியவில்லை. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா உதவுகிறது என்று டிரம்ப் கூறினார்.

அதோடு நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. வரும் 27 ம் தேதி அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. இந்தியாவை போல் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் டிரம்ப் அடுத்து சீனாவை டார்க்கெட் செய்யலாம்.
வலுவாகும் சீன உறவு
இப்படியான சூழலில் தான் நம் நாடும், சீனாவும் ஒன்றாக சேர்ந்துள்ளது. நம் நாட்டின் மீதான டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு இந்த மாத இறுதியில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்கிறார்.
அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த நம் நாட்டையும், சீனாவையும் டிரம்ப் தனது வரி விதிப்பின் மூலமாக ஒன்றாக இணைத்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வருகை
இந்நிலையில் தான் 2 நாள் பயணமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நம் நாட்டுக்கு வந்தார். அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் டெல்லியில் மீட்டிங் நடத்தினர். இந்த மீட்டிங்கின்போது இருநாடுகள் இடையே நிலவும் எல்லை பிரச்சனையை தீர்த்து, அமைதியை கொண்டு வந்து சுமூகமான உறவை வளர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜெய்சங்கர் வைத்த டிமாண்ட்
இந்த மீட்டிங்கில் ஜெய்சங்கர், ‛‛நம் உறவின் நேர்மறையான வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வர வேண்டும். இதற்கு கூட்டு நடவடிக்கை மிகவும் முக்கியம். பதற்றத்தைக் குறைக்கும் செயல்முறையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இரு தரப்பிலிருந்தும் வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை இதற்கு தேவை. இந்த முயற்சியில் கருத்து வேறுபாடுகள் சண்டையாகவோ அல்லது போட்டியாகவோ மாறக் கூடாது'' என்று கூறினார்.
சீன அமைச்சர் சொன்னது என்ன?
இதையடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறுகையில், ‛‛"எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நாங்கள் பேணி வந்தோம். சின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு இந்தியர்களின் யாத்திரையை மீண்டும் தொடங்கினோம். வெளிநாடுகளின் தலையீடுகளை அகற்றவும், ஒத்துழைப்பை விரிவாக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா-சீனா உறவுகளின் மேம்பாட்டை இன்னும் வலுப்படுத்தும் நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இதன்மூலம் ஒருவரின் வெற்றிக்கு இன்னொருவர் பங்களிப்பு செய்ய முடியும். அதுமட்டுமின்றி ஆசியா மற்றும் உலகிற்கு தேவையான உதவியை ஒருசேர வழங்க முடியும்'' என்றார்.
பெரும் எதிர்பார்ப்பில் நாளை மீட்டிங்
இந்த மீட்டிங் இந்தியா - சீனா உறவில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா வீரர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலை தொடர்ந்து இருநாடுகளின் உறவுகள் மோசமானது. அதன்பிறகு இப்போது 5 ஆண்டுகள் கழித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் நம் நாட்டுக்கு வந்துள்ளார். நாளை காலையில் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் 24வது கட்ட எல்லைப் பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.
அப்போது எல்லை பிரச்சனை பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர். அதன்பிறகு நாளை மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்த பிறகு அவர் சீனா செல்ல உள்ளார். இதனால் வாங் யி-யின் இந்தியா வருகை இருநாடுகளின் எல்லை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பிள்ளையார் சுழியாக இருக்குமோ என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications