பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை! வான்வெளியை மூடிய இந்தியா! சிக்கலில் பாக். ஏர்லைன்கள்
டெல்லி: பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் மிக மோசமான தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வான்வெளி மூடல்
அதன் ஒரு பகுதியாக இப்போது பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைய முடியாது.
கடந்த வாரம் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடிய நிலையில், இப்போது இந்தியாவும் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடி 6 நாட்கள் ஆன நிலையில், இப்போது இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது. வரும் மே 23ம் தேதி இரவு வரை இந்தத் தடை அமலில் இருக்கும். இருப்பினும், தேதி நெருங்கும்போது தடை நீடிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தியா அதிரடி
இது தொடர்பாக NOTAM அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் மற்றும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கு இந்திய வான்வெளி அனுமதி இல்லை. இதில் இராணுவ விமானங்களும் அடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
சிக்கலில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் விமானங்கள் ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதை தவிர்த்தே வந்தது. இந்தச் சூழலில் இப்போது அதிகாரப்பூர்வமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை, சீனா அல்லது தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இனி இந்தியா வான்வெளியைப் பயன்படுத்தாமல் சுற்றிச் செல்ல வேண்டும். இதன் மூலம் எரிபொருள் செலவு அதிகரித்து, பாகிஸ்தானில் விமான டிக்கெட் உயரும்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள விமான நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் இந்தியா சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் எரிபொருள் அதிகம் செலவாகும். இது பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும். மேலும், பயண நேரத்தையும் அதிகரிக்கும்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி மிக மோசமான தாக்குதல் நடந்தது. அங்கு பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசித்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு காரணமாவார்களுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியே உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல சிந்து நதி நீர் ஒப்பந்தமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications