ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?
டெல்லி: நமது நாடு முழுக்க இப்போது E20% பெட்ரோல் தான் புழக்கத்தில் இருக்கிறது. வரும் காலத்தில் இந்த எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. E100 எரிபொருள் என்றால் என்ன? இது எப்படிச் செயல்படுகிறது? இதன் நன்மைகள் மற்றும் சவால்கள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் ஒருபுறம் இருக்க.. அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மறுபுறம் என இரண்டு முக்கிய சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதற்குத் தீர்வாக மத்திய அரசு 'எத்தனால்' கலந்த எரிபொருளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள பெட்ரோலில் 20% வரை எத்தனால் கலக்கப்படுகிறது. ஆனால், இப்போது 'E100' எனப்படும் 100 சதவீத எத்தனால் எரிபொருள் குறித்த விவாதங்கள் முன்னிலைக்கு வந்துள்ளன.

E100 எரிபொருள்
E100 என்பது 100% தூய எத்தனால் எரிபொருளைக் குறிக்கிறது. எத்தனால் என்பது ஒரு வகை ஆல்கஹால் ஆகும். இது கரும்புச் சாறு, சோளம், அழுகிய தானியங்கள் மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு பயோ எரிபொருள் என்பதால், பெட்ரோலைப் போலப் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படுவதில்லை.. மாறாக விவசாய விளைபொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
தற்போது நாம் பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல் இன்ஜின்களில் E100 எரிபொருளை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதற்கு Flex-Fuel Engines என்ற வகை எஞ்சின் தேவை. இந்த இன்ஜின்கள் 100% பெட்ரோலிலோ அல்லது 100% எத்தனாலிலோ அல்லது இவை இரண்டும் கலந்த கலவையிலோ இயங்கும் திறன் கொண்டவை. பிரேசில் போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் உள்ளது.
E100 நன்மைகள்
பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனால் எரியும் போது கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற நச்சு வாயுக்கள் மிகக் குறைவாகவே வெளியேறுகின்றன. இது புவி வெப்பமடைவதைக் குறைக்க உதவும். எத்தனால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இதன் விலை பெட்ரோலை விடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இது சாமானிய மக்களின் எரிபொருள் செலவைக் குறைக்கும்.
எத்தனால் தயாரிக்கக் கரும்பு மற்றும் தானியங்கள் தேவைப்படுவதால், விவசாயிகளுக்குத் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இது கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%க்கும் அதிகமானவற்றை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. E100 பயன்பாட்டுக்கு வந்தால், வெளிநாட்டு இறக்குமதி குறைந்து, நாட்டின் அந்நியச் செலாவணி மிச்சமாகும்.
எத்தனாலில் ஆற்றல் அடர்த்தி
அதேநேரம் இதில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் அடர்த்தி குறைவு. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் தரும் மைலேஜை விட ஒரு லிட்டர் எத்தனால் தரும் மைலேஜ் 15% முதல் 25% வரை குறைவாக இருக்கலாம். மேலும், சாதாரண வாகனங்களில் இதைப் பயன்படுத்த முடியாது. இந்த எரிபொருளுக்கு ஏற்ப வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இன்ஜின் வடிவமைப்பை மாற்ற வேண்டும். இதற்குக் கூடுதல் செலவாகும் என்பதால் வாகனங்களின் விலை சற்று உயரலாம்.
எரிபொருள் தயாரிப்பதற்காக அதிக அளவில் சோளம் மற்றும் கரும்பைப் பயன்படுத்தினால், உணவுத் தேவைக்கான பயிர் சாகுபடி குறைய வாய்ப்புள்ளது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம். நாடு முழுவதும் E100 எரிபொருளை விநியோகிக்கத் தனி பயன்பாட்டு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அதிக முதலீடு தேவைப்படும்.
E100 எரிபொருள்
E100 எரிபொருள் என்பது இந்தியாவின் எரிபொருள் தேவையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பக்கட்ட சவால்கள் மற்றும் மைலேஜ் குறைபாடு போன்ற சிக்கல்கள் இருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக இது ஒரு சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது. டொயோட்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் பிளெக்ஸ்-ஃபியூயல் கார்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications