அமெரிக்கா உறவெல்லாம் அப்புறம்தான்..முதலில் இதை கொண்டு போங்க! பாலஸ்தீனத்திற்கு இந்தியா செய்த பேருதவி
டெல்லி: பாலஸ்தீனம் மீது கடந்த 15 நாட்களாக இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்து இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகளும் உதவி பொருட்களை அனுப்பி வருகிறது. இந்தியாவும் இன்று டன் கணக்கில் மருந்து பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது.
பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்த குழு தான் ஹமாஸ். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த ஹமாஸ் குழு பயங்கரவாத தாக்குதல்களை தொடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக கொடூரமான பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால் தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருகிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவுக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் சப்ளையை இஸ்ரேல் துண்டித்திருப்பதால் சுமார் 23 லட்சம் காசா மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளும், ஐநாவும் உதவி பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த பொருட்கள் கடந்த சில நாட்களாக ராஃபா எல்லையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் பாதிப்பு கடல் அளவுக்கு இருக்கும் நிலையில் உதவி பொருட்கள் கடுகளவுக்குதான் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவியை செய்து வருகிறது. இன்று இந்தியாவும் டன் கணக்கில் மருந்து பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 எனும் விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்குவதற்கு பாய் போன்ற பொருட்கள், தார்பாய்கள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனைய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது x சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
முன்னதாக காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்தார். மேலும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பிய அவர், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை செய்யும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
முன்னதாக கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலுடன் இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். பாலஸ்தீன-இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகதான் இருந்து வந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட பாலஸ்தீனத்திற்குதான் ஆதரவளித்தார். இப்படி இருக்கையில் பிரதமர் மோடி திடீரென இஸ்ரேலுடன் இந்தியா நிற்கும் என்று கூறியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவும், பிரிட்டனும் இஸ்ரேலுக்குதான் ஆதரவாக இருக்கின்றன. இந்தியா இந்த இரு நாடுகளுடன் ஆழமான உறவை கொண்டிருக்கிறது. எனவேதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா பேசியது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்த ஆழமான உறவை கடந்து இந்தியா, பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை செய்திருப்பதை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications