Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் கேஸ் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சப்ளை முடங்குமோ என்ற அச்சமும் உருவாகி உள்ளது. ஆனால், இந்த சிக்கலுக்கு உள்நாட்டிலேயே நம்மிடம் ஒரு தீர்வு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஹார்முஸ் ஜலசந்தி அச்சுறுத்தல்களைச் சந்திக்கும்போது இந்தியாவின் சமையலறைகள் பாதிக்கப்படுகின்றன. இந்தியா ஆண்டுக்கு சுமார் 31.3 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி கேஸை நுகர்கிறது. அதில் கிட்டத்தட்ட 60-67% வரை இறக்குமதி தான் செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் கேஸில் 90% இந்த முக்கிய வழித்தடம் வழியாகவே செல்கிறது.

India LPG Crisis has a Indigenous Fix DME way of Cooking Tech Ready to End Import Dependence

பாதிப்பு

சமீபத்திய ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் மோதல்களே இந்த உடனடி பாதிப்பை ஏற்படுத்தின. இந்த மோதலால் எல்.பி.ஜி. இறக்குமதி 30% சரிந்தது. பல நகரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் தடைப்பட்டது.. அரசு வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியது.

உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டது.. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அல்ஜீரியாவிடம் இருந்து மாற்று சப்ளை தேடப்பட்டன. அமெரிக்க வளைகுடாப் பகுதியுடன் முந்தைய 2.2 மில்லியன் டன் எல்பிஜி ஒப்பந்தம் இப்போது பயன் மிக்கதாக உள்ளது. ஆனால், இப்போதைய சூழலில் விநியோகப் பாதைகளை மாற்றுவது நெருக்கடியை நிர்வகிக்க மட்டுமே உதவும் தவிரத் தீர்க்காது.

சிக்கல்

அமெரிக்க எல்பிஜியில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது அமெரிக்கா எல்பிஜி கேஸில் பெரும்பாலும் புரொப்பேன் தான் இருக்கும். அதேநேரம் இந்திய கேஸ் சிலிண்டர்களில் 60:40 பியூட்டேன்-புரொப்பேன் கலவை இருக்கும். மத்திய கிழக்கில் இருந்து கிடைக்கும் கேஸ் தான் நமக்கு இதைத் தருகின்றன. எனவே, வேறு இடத்தில் இருந்து நாம் வாங்கும்போது, பயண நேரம் மட்டும் அதிகரிப்பதில்லை.. உள்ளே இருக்கும் கேஸ் மிக்ஸும் மாறுகிறது.

இந்தியாவில் சுமார் 33 குடும்பங்கள் கேஸ் சிலிண்டரை நம்பி இருக்கும் சூழலில், அதில் ஏற்படும் பாதிப்பு இந்தியக் குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கிறது.. இதுபோல நெருக்கடி வரும்போது மட்டும் நாம் மத்திய கிழக்கில் இருந்து விலகிப் பிற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்வது சிக்கலை நிர்வகிக்க உதவுமே தவிர முழுமையாகத் தீர்க்காது. நாம் இதில் முழு தீர்வை கண்டுபிடிக்காத வகையில் இதில் நமக்குப் பிரச்சனை தீரவே தீராது.

உள்நாட்டுத் தீர்வு

கடந்த 2026ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி முன்னாள் சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குநர் டாக்டர் ரகுநாத் மாஷேல்கர் இதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைத்தார்.. சி.எஸ்.ஐ.ஆர்.-என்.சி.எல். நிறுவனங்கள் இணைந்து 2017ல் உருவாக்கிய Dimethyl Ether அதாவது DME சிறந்த மாற்று எரிபொருளாக இருக்கும் எனத் தெரிவித்தார். மெத்தனால் நீரிழப்பு செய்யப்பட்டு DME உற்பத்தி செய்யப்படுகிறது. மெத்தனால் உள்நாட்டு நிலக்கரி அல்லது பயோமாஸிலிருந்து பெறலாம். எல்.பி.ஜி போலவே DMEயும் குறைந்த அழுத்தத்தில் திரவமாகிறது. இது பெரிய மாற்றமின்றி எல்.பி.ஜி.யில் 20% வரை கலக்கலாம். அப்படி மிகஸ் செய்யும்போது, புகையின்றி எரிகிறது. மேலும், 10-15% அதிக செயல்திறனைத் தருகிறது.

இது கடந்த 2020ல் இருந்து தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனைகள் நம்பிக்கை தரும் வகையிலேயே இருப்பதாக பெட்ரோலியத் துறையின் உயர் தொழில்நுட்ப மையத்தை மாஷேல்கர் தெரிவித்தார்..

கேஸ்

மேலும், CSIR-IICT, BHEL உள்ளிட்ட நிறுவனங்கள் CO₂ல் இருந்து இந்த DMEஐ உருவாக்கும் முறைகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன. கோதாவரி பயோ-ரிஃபைனரிகள் 2025இல் ஐசிடி மும்பையுடன் இணைந்து இந்த CO₂-to-DME பைலட் திட்டத்தைத் தொடங்கின. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு DME சிறந்த தீர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் DME உடனடித் தீர்வு அல்ல. இதற்கு தற்போதைய செலவுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான முதலீடு தேவை. நிதி மட்டும் பிரச்சினை இல்லை. இந்த டிஎம்இக்கு தேவையான மெத்தனாலை ரெடி செய்வதும் இன்னொரு சிக்கல். இந்தியா அதன் மெத்தனால் தேவையில் 90%க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. எனவே, முதலில் மெத்தனால் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க நடவடிக்கை தேவை.

ஒரே தீர்வு

நிலக்கரியில் இருந்து மெத்தனாலை உற்பத்தி செய்யலாம். ஆனால், அது சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும். அல்லது. இந்தியாவின் 230 மில்லியன் டன் உபரி விவசாயக் கழிவுகள் / நகராட்சி கழிவுகளிலிருந்து பயோமாஸ் மூலம் மெத்தனால் தயாரிக்கலாம். இது CO₂-லிருந்து DME தயாரிப்பிற்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கேஸ் பற்றாக்குறைக்கு DME ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால், அது நாளைக்கே நமக்கு கிடைத்துவிடாது. பல ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் மீண்டும் இதுபோன்ற ஒரு சிக்கலே ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+