இனி 8000+ பொருட்களுக்கு ஒரு சதவிகிதம் கூட வரி இல்லை.. இந்தியா நியூசிலாந்து ஒப்பந்தம் ஏன் முக்கியம்?
டெல்லி: இந்தியா- நியூசிலாந்து இடையே மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு அதிக நன்மைகளைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 8000க்கும் மேற்பட்ட பொருட்களை இந்திய பிஸ்னஸ்மேன்கள் எந்தவொரு கூடுதல் வரியும் இல்லாமல் நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்!
இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை வலுப்படுத்துவதில் வேகம் காட்டி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல உலக நாடுகள் உடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்க மிகப் பெரியளவில் உதவுகிறது.

இந்தியா நியூசிலாந்து
இதற்கிடையே இந்தியா இப்போது நியூசிலாந்து உடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
அதாவது அமெரிக்கா எப்போது வரிகள் என மிரட்ட ஆரம்பித்தாரோ அப்போது தான் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தது. துரிதமாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், வெறும் 9 மாதங்களில், அதாவது கடந்தாண்டு டிசம்பரில் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது. இது இந்தியாவின் மிக வேகமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒப்பந்தத்தின் ஹைலைட்ஸ்
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பொருளாதாரப் பாலத்தை அமைக்கும் வகையில் இருக்கிறது.
இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 8,284 பொருட்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும்.
நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் கம்பளி, மரம், நிலக்கரி மற்றும் பழங்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் $20 பில்லியன் (சுமார் ₹1.6 லட்சம் கோடி) முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதி அளித்துள்ளது.
இந்திய ஐடி, சுகாதாரம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த 5,000 நிபுணர்களுக்கு விசா முன்னுரிமை வழங்கப்படும். ஆண்டுதோறும் 1,000 இந்திய இளைஞர்களுக்கு 'ஒர்க் அண்ட் ஹாலிடே' விசாக்கள் வழங்கப்படும்.
விலக்கு
நியூசிலாந்து உலகிலேயே பால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதன்மையான நாடாகும். அங்கிருந்து பால் பொருட்கள் இறக்குமதியானால் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற அச்சம் நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பால், வெங்காயம், சர்க்கரை, மசாலாப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய சென்சிட்டிவ் ஆன துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டெர்லிங் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் ரவீன் சலூஜா கூறுகையில், "இந்த ஒப்பந்தம் இந்தியப் பால் நிறுவனங்கள் தங்களின் தரத்தை மேலும் உயர்த்த ஒரு தூண்டுதலாக இருக்கும். அதேநேரம், விவசாயிகளைப் பாதுகாக்க சில குறிப்பிட்ட வரிகள் அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கியம்
உலக அளவில் முக்கிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில், 140 கோடி மக்கள் கொண்ட இந்தியச் சந்தையை அணுகும் வாய்ப்பு நியூசிலாந்திற்குக் கிடைத்துள்ளதாகவும் இது ஒரு அற்புதமான வாய்ப்பு என்றும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் குறிப்பிட்டுள்ளார்.. அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை $5 பில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்கும் அதேநேரம், முதலீட்டை அதிகரிக்க இது ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தம் என்றே பலரும் பாராட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications