டிரம்பை பார்த்து பதறும் உலக நாடுகள்! அந்த லிஸ்ட்டில் இந்தியா இருக்கா? ஜெய்சங்கர் முக்கிய தகவல்
டெல்லி: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி உள்ளார். டொனால்ட் டிரம்ப்பை பார்த்து உலக நாடுகள் பதற்றமடைந்துள்ள நிலையில் அந்த லிஸ்ட்டில் இந்தியா இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.

கடந்த 5ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதன்பிறகு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக செயல்பட உள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் 2 முறை தான் அதிபராக பொறுப்பு வகிக்க முடியும். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் 2016 முதல் 2020 வரை அதிபராக செயல்பட்டார். தற்போது அவர் 2வது முறையாக அதிபராக இருக்கிறார். இதனால் இந்த முறை டொனால்ட் டிரம்ப் தான் நினைத்த விஷயங்களை நிச்சயம் செய்து முடிப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் மொத்த உலகும் டொனால்ட் டிரம்ப்பின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.
ஈரான் உள்பட அமெரிக்காவுடன் மோதல் போக்கில் உள்ள நாடுகள் டொனால்ட் டிரம்பை கண்டு ஒருவித பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தான் மும்பையில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் உதவித்தொகை திட்டத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றபோது பேசினார். இந்த வேளையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஜெய்சங்கர் கூறியதாவது: டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்ற பிறகு அவர் எடுத்து பேசிய முதல் 3 தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடியும் ஒருவராக இருந்தார். ஒருவரிடம் நல்ல உறவை உருவாக்கும் பண்பு அவருக்கு (பிரதமர் மோடி) இயற்கையாகவே உள்ளது. அதனால் தான் அந்த தொலைபேசி உரையாடல் சாத்தியமானது.
அதேபோல் நம் நாட்டில் நடக்கும் மாற்றங்களும் மிகவும் முக்கியானது என்று பார்க்கிறேன். மாற்றத்துக்கு நாமே உதாரணமாக இருக்கிறோம். நமது பொருளாதாரம் என்பது சிறப்பாகவே உள்ளது. சிறப்பான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் நாம் முன்னேறி வருகிறோம். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகி உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அதிபரானதை தொடர்ந்து பல நாடுகள் பதற்றமாக இருக்கிறது. பதற்றமான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. நமக்கு பதற்றம் எதுவும் தேவையில்லை'' என்று கூறினார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வான பிறகு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவருக்கு வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர முதலில் எக்ஸ் பக்கத்திலும், அதன்பிறகு தொலைபேசியில் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
